2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு  சமுதாய வளைகாப்பு விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2  ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வெள்ளிக்கிழமை சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2  ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வெள்ளிக்கிழமை சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
தமிழக அரசின் சமுக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, ஒருங்கிணைந்த  குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில்  ஏழை கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. 
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்கள் மூலமாக ஒரு தொகுதிக்கு 40 கர்ப்பிணிகள் வீதம் 50 தொகுதிகளில் 2 ஆயிரம் ஏழை கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் நாகர்கோவில் நகர்ப்புறத்தை சேர்ந்த 160 பேர் மற்றும்    ஊரகப் பகுதிகளில் 1840  கர்ப்பிணிகளுக்கும் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நாகர்கோவில் வடிவீசுவரம் குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவுக்கு  மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி  தலைமை வகித்தார்.
இவ்விழாவில் கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பற்றியும்,  தன்சுத்தம் பற்றியும் கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் 10 கிலோ எடை கூட வேண்டும் என்றும்,  சத்தான உணவு உட்கொள்ள வேண்டும் என்றும், கருவுற்ற காலத்தில் மகிழ்ச்சியாகவும்,  ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் கருவில் உள்ள குழந்தை நன்றாக வளர்ந்து 3 கிலோ எடையில்  ஆரோக்கியமாக குழந்தை  பிறக்கும் என்பதற்கான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு பூ , பழங்களுடன் வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டு 5 வகை கலவை சாதமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேச்சியம்மாள், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)  மதுசூதனன், இருளப்பபுரம் பெரியசாமி பாண்டியன் பால் உற்பத்தியாளர்  சங்கத் தலைவர் எஸ்.ஏ.அசோகன்,   மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்  ஜஸ்டின் செல்வராஜ், பொழிக்கரை மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் சேவியர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தாழக்குடியில்:  நாகர்கோவில் அருகே தாழக்குடியில்  பண்டாரபுரத்தில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு விஜயகுமார் எம்.பி. தலைமை வகித்து கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் , அதிமுக மாவட்டத் துணைச் செயலர்  ஞானசேகர், நிர்வாகிகள் கனகராஜன், சந்தோஷ், ஆனந்த், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com