குழித்துறை அருகே  மருத்துவமனையில் தகராறு: ஒருவர் கைது

குழித்துறை அருகே தலையில் காயம் ஏற்பட்டவருக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த போது

குழித்துறை அருகே தலையில் காயம் ஏற்பட்டவருக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த போது மருத்துவரை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறு செய்ததாக நகர்மன்ற முன்னாள் பெண் கவுன்சிலரின் கணவரை கைது செய்தனர்.
குழித்துறை அருகே பாலவிளை பகுதியில் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் சுதன் வியாழக்கிழமை இரவு பணியிலிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தலையில் காயமடைந்த ஒருவரை  மருத்துவமனைக்கு  கொண்டு வந்தனராம். தலையில் பலத்த காயம் காணப்பட்டதால் வேறு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவர் தெரிவித்தாராம். 
அப்போது, அதே மருத்துவமனையில் இருந்த குழித்துறை நகர்மன்ற முன்னாள் பெண் கவுன்சிலர் நித்யா மற்றும் அவரது கணவர் அனில்குமார் ஆகியோர்  மருத்துவரிடம், காயம் ஏற்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்க  வலியுறுத்தினராம். இதையடுத்து தலையில் காயம் ஏற்பட்டவர் தரையில் இருந்த நிலையில் மருத்துவர் அதே இடத்தில் வைத்து அவரது தலையில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டாராம். 
இதை அங்கு நின்ற ஒருவர் தனது செல்லிடப்பேசி மூலம் பதிவு செய்ததுடன், தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்தாராம். தொலைக்காட்சி செய்தியாளர் அங்கு வருவதற்கு முன்னர் தலையில் காயம் ஏற்பட்டவர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாராம்.
இந்த நிலையில் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் முன்னாள் பெண் கவுன்சிலர், அவரது கணவர் ஆகியோருக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்,  இதில் காயமடைந்த செய்தியாளர் குழித்துறை பகுதியிலுள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து,  மருத்துவர் சுதன் அளித்த புகாரின் பேரில் முன்னாள் பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, முன்னாள் கவுன்சிலரின் கணவர் அனில்குமாரை கைது செய்தனர். இதே போன்று, செய்தி சேகரிக்கச் சென்றபோது தன்னை தாக்கியதாக  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் குழித்துறை பகுதியைச் சேர்ந்த மனு அளித்த புகாரின் பேரில் மருத்துவர் சுதன் மற்றும்   14 பேர் மீது களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com