சாலையை சீரமைக்க கோரி கொல்லங்கோடு சந்திப்பில் வணிகர்கள் மறியல்

கொல்லங்கோடு மேடவிளாகம் - ஊரம்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி வணிகர் சங்கத்தினர் கொல்லங்கோடு

கொல்லங்கோடு மேடவிளாகம் - ஊரம்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி வணிகர் சங்கத்தினர் கொல்லங்கோடு சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்துக்கு கொல்லங்கோடு தொழில் வர்த்தகர் சங்கத் தலைவர் கோபன் தலைமை வகித்தார்.  செயலர் ஹரிகுமார், துணைத் தலைவர் தாமோதரன், பொருளாளர் சதீசன் நாயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை குமரி மேற்கு மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத் தலைவர் அல் அமீன் தொடங்கி வைத்துப் பேசினார். கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார், மார்க்சிஸ்ட்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன், கொல்லங்கோடு மண்டல பாஜக தலைவர்  ஸ்ரீகண்டன் தம்பி, ஏழுதேசம் பகுதி வணிகர் சங்கத் தலைவர் தாஸ், ஊரம்பு பகுதி வணிகர் சங்கத் தலைவர் வர்க்கீஸ் உள்பட வணிகர்கள் கலந்து கொண்டனர். இப் போராட்டத்தையொட்டி கொல்லங்கோடு பகுதியில் வணிகர்கள் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
  தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் கொல்லங்கோடு காவல் ஆய்வாளர் கருணாகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில்  உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கர் அப்பகுதிக்கு வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார்.
பேச்சுவார்த்தையில், மேடவிளாகம் - ஊரம்பு சாலையோரம் வடிகால் அமைப்பது, கன்னியாகுமரி - பழைய உச்சகடை சாலையில் கண்ணநாகம் சந்திப்பில் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் 2 மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களை விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com