ஊதிய உயர்வின்றி தவிக்கும் அரசு நீச்சல்குள உயிர்க் காப்பாளர்கள்!கோ.முத்துக்குமார்

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல்குளத்தில் உயிர்க் காப்பாளர்களாகப் பணியாற்றுவோர் பல ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல்குளத்தில் உயிர்க் காப்பாளர்களாகப் பணியாற்றுவோர் பல ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் நீச்சல் பயிற்சியை அதிகரிக்கும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 24 இடங்களில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் நீச்சல் குளங்கள் ஏற்படுத்தப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் அரசின் நீச்சல் குளம் அமைக்கப்பட்டது. பொதுமக்களின் நிதியுதவியோடு கட்டப்பட்ட இந்த நீச்சல்குளம், கடந்த 13-9-2003 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

12 மீட்டர் அகலமும், 25 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நீச்சல் குளத்தில், நீச்சல் புதிதாக பழகுவோர் விபத்தில் சிக்காமல் இருக்கும் வகையில் 3.5 அடி முதல் 7 அடி உயரம் வரை படிப்படியாக ஆழப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் டைல்ஸ் பதிக்கப்பட்டு, சுத்திகரிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இங்கு தினமும் பெரியவர்கள், மாணவர்-மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வந்து நீச்சல் பழகியும், நீச்சல் பயிற்சி பெற்றும் செல்கிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீச்சல் குளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. இதுதவிர மாதாந்திர போட்டிகள், மாவட்ட நீச்சல் கழக போட்டிகள், மே மாத சிறப்பு பயிற்சிகள் போன்றவற்றின்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த நீச்சல் குளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

நீச்சல் பழக வருவோருக்குப் பயிற்றுவிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும், போட்டிக் காலங்களில் உதவவும் நீச்சல் குளத்தில் 4 உயிர்க் காப்பாளர்களும், ஒரு எலக்ட்ரீஷியன், ஒரு பூங்கா காப்பாளரும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் மட்டுமே ஊதியமாகக் கிடைத்துவருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் ஊதிய உயர்வு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

இது குறித்து நீச்சல் குள தினக்கூலி பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது:

விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையில் பல இடங்களில் தினக்கூலி பணியாளர்கள் உள்ளனர். குறிப்பாக நீச்சல் குளங்களில் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பல உயிர்க் காப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் உள்ளது. மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியத்தைக் கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். இது குறித்து ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலகத்தில் மனுக்களை அளித்தும் இதுவரை பலனில்லை. ஆகவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு விளையாட்டுத் துறையில் உள்ள தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும், தகுதியானவர்களுக்கு பணிநிரந்தரமும் அளித்து உதவ வேண்டும் என்றனர்.

வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்: இது குறித்து நீச்சல் வீரர் ஒருவர் கூறியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு சார்பில் ஒரே ஒரு நீச்சல் குளம் மட்டுமே உள்ளது. மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் ஆறு-குளங்களில் நீச்சல் பழகியவர்கள் பங்கேற்க முடியாது. ப்ரீஸ்டைல், பேக் ஸ்டோக், பட்டர்பிளை, பிரஸ்ட் ஸ்டோக் போன்ற பிரிவுகளின் கீழ் விதிகளை அறிந்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். இப்போது சில தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே நீச்சல் குளங்கள் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நீச்சலில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பலரும் மாநில, தேசிய நீச்சல்போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு நீச்சல் குளங்கள் மற்றும் பயிற்சியாளர்கள், உயிர்க்காப்பாளர்கள் தட்டுப்பாடே பிரதான காரணமாகும்.

இந்தியாவில் நீச்சல் பயிற்சிக்கான ஓராண்டு படிப்பை (என்.ஐ.எஸ். சான்றிதழ்) முடித்த 500-க்கும் மேற்பட்டோர் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நீச்சல் பயிற்சியாளர்கள், உயிர்க் காப்பாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையை மாற்றி தமிழகத்தில் நீச்சல் வீரர்கள், நீச்சல் பயிற்சியாளர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்றார்.

சலுகைக் கட்டணத்தில் நீந்தலாம்!

தினமும் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் பொதுமக்களுக்காகவும், முற்பகல் 11 முதல் 12 மணி வரை பெண்களுக்கு தனியாகவும் நேரம் ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஓராண்டுக்கு வந்து நீந்திச்செல்ல சலுகை கட்டணமாக ரூ.6000 வசூலிக்கப்படுகிறது. தனிநபர் ஓராண்டுக்கு நீந்த ரூ.3500, தனிநபர் (பெரியவர்) ஒரு மணி நேரம் நீந்த ரூ.50, சிறியவர் நீந்த ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுதவிர ஒரு நபருக்கு 3 மாத கட்டணமாக ரூ.1500, 6 மாத கட்டணமாக ரூ.2500 வசூலிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com