சைவ வேளாளர் சமூகத்தினருக்கு 15% தனி இட ஒதுக்கீடு: இளைஞரணி மாநாட்டில் வலியுறுத்தல்

சைவ வேளாளர் சமூகத்தினருக்கு 15 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க இளைஞரணி மாநாட்டில்

சைவ வேளாளர் சமூகத்தினருக்கு 15 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க இளைஞரணி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
திருநெல்வேலி தெற்கு மாவட்ட தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில், இளைஞரணி மாவட்ட மாநாடு பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ். பகவதிமுத்து (எ) புளியரை ராஜா தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன் பேசியது:
வளர்ந்து வரும் நாடாக கருதப்படும் இந்தியாவில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 464 கட்சிகள் போட்டியிட்டுள்ளன. கூட்டணிக்காக கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தரம் தாழ்ந்துவிட்டன. பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் நிலை மாறினால்தான் இந்திய சமூகம் வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்பு, கல்வி, ஆராய்ச்சி, வேளாண்மை என எந்தத் துறையாக இருந்தாலும் லஞ்ச லாவண்யம் தவிர்க்க முடியாமல் உள்ளது. கல்வி வளர்ச்சியால் மட்டுமே இத்தகைய நிலையை மாற்ற முடியும். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு திரண்டதைப் போன்று தமிழ்ச் சமூகத்தை மாற்ற இளைஞர்கள் அணிதிரள வேண்டும் என்றார்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். காசிவிஸ்வநாதன், மண்டலச் செயலர் கணபதியப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குருஉலகநாதன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ராஜராஜன் உள்ளிட்ட பலர் பேசினர்.
வ.உ. சிதம்பரம் பிள்ளை, காங்கேயன் பிள்ளை, சேர்மன் மகாராஜபிள்ளை, ஏ.எல். சுப்பிரமணியம் ஆகியோரது உருவப்படங்கள் திறந்துவைக்கப்பட்டன. மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இந்தியாவில் பிற மாநிலங்களில் பிற்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் 69 சவீத இடஒதுக்கீடு உள்ளது. மீதமுள்ள 31 சதவீதத்திலும் பொது எனக் குறிப்பிட்டு அனைத்து சமூகத்தினரும் பயன்பெறும் நிலை உள்ளது. இதனால், முற்பட்ட வகுப்பினர் பயன்பெற முடியாத நிலை உள்ளது. எனவே, தமிழகத்தில் 31 சதவீத ஒதுக்கீட்டை முற்பட்ட சமூகத்தினருக்கு வழங்க வேண்டும். இதில், 15 சதவீதத்தை சைவ வேளாளர் சமூகத்தினருக்கு தனி ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வென்றெடுக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை விரைந்து அமல்படுத்த வேண்டும். மாவட்டந்தோறும் புதிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பிற மாநிலங்களில் கையேந்தும் நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தடுப்பணைத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வ.உ.சி.க்கு நாடாளுமன்றத்தில் முழு உருவச் சிலை நிறுவ வேண்டும். ரூபாய் நோட்டுகளில் வ.உ.சி.யின் உருவப்படம் அச்சிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com