வறட்சி எதிரொலி: விவசாயிகளுக்கு வங்கிகள் நெருக்கடி அளிக்கக் கூடாது: அரசு செயலர் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகளுக்கு வங்கிகள் நெருக்கடி அளிக்கக் கூடாது என தமிழக அரசின் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலரும்,

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகளுக்கு வங்கிகள் நெருக்கடி அளிக்கக் கூடாது என தமிழக அரசின் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலரும், திருநெல்வேலி மாவட்டத்துக்கான கண்காணிப்பாளருமான ராஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.
வங்கியில் உள்ள கடன் நிலுவைக்காக வறட்சி நிவாரணத் தொகையை பிடித்தம் செய்யக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சியை எதிர்கொள்வதற்கு செயல்படுத்த வேண்டிய திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி தலைமை வகித்தார். இக் கூட்டத்தில், ராஜேந்திரகுமார் பேசியது:
தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் கடும் வறட்சி காணப்படுகிறது. எனவே, வறட்சி நிவாரணப் பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டியது அவசியம். முதலில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும். இதற்கு, மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். கிடைக்கின்ற நீராதாரத்தை பயன்படுத்தி அனைத்துப் பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் பயிர்களுக்கு ஏற்ற வகையில் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தருணத்தில் அனைத்து வங்கிகளும் விவசாயிகளிடம் நெருக்கடி சூழலை ஏற்படுத்தக் கூடாது. களப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள், அந்தந்தப் பகுதி வங்கி அலுவலர்களிடம் இது தொடர்பாக அறிவுறுத்தி இடையூறு அளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாது வங்கிகளில் உள்ள நிலுவைத் தொகைக்காக, வறட்சி நிவாரணத் தொகையில் பிடித்தம் செய்யக் கூடாது என்றார் அவர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 42 ஆயிரம் பேருக்கு ரூ.30.32 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 52,915 விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று வழங்கப்படவுள்ளது. மே முதல் வாரத்தில் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் இப்போது 8.5 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இருக்கின்ற நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குடிமராமத்து திட்டத்தில் தலா ரூ. 6 லட்சம் மதிப்பில் 106 குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. தாய் திட்டத்தின் மூலம் 48 குளங்களும், தனியார் உதவியுடன் 6 குளங்களும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. ஊரக வேலை உறுதி திட்டத்தில் 112 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 40 பேருக்கு தலா ரூ.58,690 மதிப்பில் (மொத்தம் ரூ.23.47 லட்சம்) இணைப்பு சக்கரங்களுடன் கூடிய பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பழனி, திருநெல்வேலி மாநகரட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com