அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்க மறுப்பு: அமைச்சரிடம் பெண் புகார்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த தன்னை செவிலியர்கள் அனுமதிக்க மறுத்ததாக, அமைச்சர் ராஜலெட்சுமியிடம் ஒரு பெண் புகார் அளித்தார். இதுகுறித்து விளக்கமளிக்க

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த தன்னை செவிலியர்கள் அனுமதிக்க மறுத்ததாக, அமைச்சர் ராஜலெட்சுமியிடம் ஒரு பெண் புகார் அளித்தார். இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என மருத்துவர்களிடம் அமைச்சர் உத்தரவிட்டார்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அவருடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் சென்று அங்குள்ள உள் நோயாளிகளைப் பார்வையிட்டு நலம் விசாரித்தார். அவர்களிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், மருத்துவமனையில் உடைந்து கிடக்கும் கதவுகள், இயங்காமல் இருக்கும் மின்விசிறிகள் ஆகியவற்றைப் பார்த்த அமைச்சர், அவற்றை உடனே சரிசெய்ய உத்தரவிட்டார். அதன்பிறகு அவர் வெளியே வந்தபோது, சங்கரன்கோவில் சங்குபுரம் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காந்திராஜன் மனைவி ராமலெட்சுமி அமைச்சரிடம் மருத்துவமனை குறித்து புகார் தெரிவித்தார்.
கர்ப்பமாக இருந்த ராமலெட்சுமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். கடந்த ஜூலை 26ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு, பிற்பகலில் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, இரு செவிலியர்கள் உள்ளே அனுமதிக்காமலும், மயக்க மருத்துவர்கள் இல்லை என்றும், நன்றாக வலி வந்தால் வருமாறும் கூறியதால் சென்றுவிட்டாராம். இரவு வலி வந்து மருத்துவமனைக்கு வந்தபோது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனராம். நன்றாக இருந்த குழந்தை இறந்ததற்கு அந்த செவிலியர்கள்தான் காரணம் என்றும், இதுபோல வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது எனவும் அவர் அழுதுகொண்டே அமைச்சரிடம் கூறினார்.
உடனே, அமைச்சர் தலைமை மருத்துவரை அழைத்து, புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநில விற்பனை கூட்டுறவு இணைய துணைத் தலைவர் கே.கண்ணன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் வேலுச்சாமி, ஆறுமுகம்,
செளந்தர், இ.வி.முருகன், விரைவுப் பேருந்து அண்ணா தொழிற்சங்கச் செயலர் ஹரிஹரகருப்பையா உள்ளிட்ட பலர்உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com