கந்து வட்டி புகார்: ஓய்வுபெற்ற ஆசிரியர் கைது

திருநெல்வேலி மாவட்டம்,  பாவூர்சத்திரம் அருகே கந்து வட்டி புகாரின்பேரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம்,  பாவூர்சத்திரம் அருகே கந்து வட்டி புகாரின்பேரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகளான ஆசிரியை உள்பட 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (49).  இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமலிங்கம் (65), அவரது மகள் ஆசிரியை ஜெயலட்சுமி, மற்றொரு மகள் வெண்மணி, அவரது மகன் பரிதிராஜன் ஆகியோரிடம் வட்டிக்கு ரூ. 30 லட்சம் வாங்கி, இதற்கு ஈடாக தனக்குச் சொந்தமாக பாவூர்சத்திரத்தில் உள்ள 10 சென்ட் நிலம், சாலைப்புதூரில் உள்ள 38 சென்ட் நிலம், கீழப்பாவூர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள 5 சென்ட் நிலம் ஆகியவற்றை எழுதிக்கொடுத்திருந்தாராம். அதன் பிறகு மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்த நிலையில், இப்போது ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமாக வட்டி செலுத்திவிட்டதாகவும், எனவே நிலத்தைத் திருப்பித் தரும்படியும் ராமலிங்கம், குடும்பத்தினரிடம் ராமச்சந்திரன் கேட்டாராம். அவர்கள் மறுத்துவிட்டனராம். இதனிடையே, பாவூர்சத்திரம், சாலைப்புதூரில் உள்ள ராமச்சந்திரனின் நிலங்களை ராமலிங்கம் குடும்பத்தினர் விற்றுவிட்டதாக தகவல் கிடைத்ததாம். இது தொடர்பாக ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் ராமச்சந்திரன் புகார் தெரிவித்தார். பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலைராஜன் வழக்குப் பதிந்து ராமலிங்கத்தை கைது செய்து, தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு தொடர்பாக ஆசிரியை ஜெயலட்சுமி உள்ளிட்ட 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com