டிச. 10இல் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணை

கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணை வரும் 10ஆம் தேதி சமாதானபுரம் ஏடிஎம்எஸ் அரங்கில் நடைபெறுகிறது.

கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணை வரும் 10ஆம் தேதி சமாதானபுரம் ஏடிஎம்எஸ் அரங்கில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக கந்துவட்டி ஒழிப்புக் கூட்டியக்கத்தில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பாஸ்கரன் கூறியதாவது: 
கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், அது அமல்படுத்தப்படவில்லை. கடந்த அக்டோபர் 23ஆம் தேதி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 4 பேர் தீக்குளித்து உயிரிழந்தனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கந்து வட்டி பிரிவுக்கு 139 புகார்கள் வரப் பெற்றுள்ளதாகவும், அது தொடர்பாக சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய பொது விசாரணைக்கு இதுவரை 104 புகார்கள் வந்துள்ளன. 
இதுதொடர்பாக டிச. 10ஆம் தேதி பொதுவிசாரணை நடைபெறவுள்ளது. அந்த விசாரணையில் இதுவரை புகார் அளித்தவர்கள் மட்டுமன்றி,  கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் பங்கேற்கலாம். ஏற்கெனவே புகார் அளித்தவர்கள், புகாரில் கூறப்பட்டிருக்கும் கந்து வட்டி தொழில் செய்யும் நபர், அந்தப் பகுதி சம்பந்தப்பட்ட காவல் துறையினர் ஆகியோருக்கும் பொது விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுதவிர கந்து வட்டி கொடுமை தொடர்பாக கார்ட்டூன் வரைந்ததற்காக கைது செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் பாலாவும் பொது விசாரணையில் பங்கேற்று புகார் அளிக்கிறார்.  
இந்த பொது விசாரணைக்கு மும்பை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஜிஹோல்சே பட்டேல் தலைமை வகிக்கிறார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், மாநில மகளிர் ஆணையத்தின் தலைவருமான வசந்தி தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள் என்றார்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் காசிவிஸ்வநாதன்,  மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் உஸ்மான் கான், மாவட்ட துணைத் தலைவர் ஜாபர், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த நெல்லை முபாரக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com