நெல்லை, தூத்துக்குடியில் கணக்கெடுப்பு: பாசனக் குளங்கள், அணைகளில் 8,256 பறவைகள்: வறட்சியால் வருகை குறைவு

தாமிரவருணி பாசனத்திலுள்ள குளங்கள் வறண்டதால் நிகழாண்டு பறவைகளின் வருகை குறைந்துள்ளது. அணைகள், குளங்களில் 8,256
நெல்லை, தூத்துக்குடியில் கணக்கெடுப்பு: பாசனக் குளங்கள், அணைகளில் 8,256 பறவைகள்: வறட்சியால் வருகை குறைவு

தாமிரவருணி பாசனத்திலுள்ள குளங்கள் வறண்டதால் நிகழாண்டு பறவைகளின் வருகை குறைந்துள்ளது. அணைகள், குளங்களில் 8,256 நீர்வாழ் பறவைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தாமிரவருணி நதியை சார்ந்த பாசனக் குளங்கள், நீர்வரத்து குளங்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து அரியவகை பறவை இனங்கள் வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், திருப்புடைமருதூர் பறவைகள் சரணாலயம், வாகைக்குளம் பறவைகள் வாழ்விடம், தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பகுளம், பெருங்குளம், கருங்குளம் போன்ற குளங்களுக்கு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.
இங்கு வரும் பறவைகள் குறித்து, மணிமுத்தாறு அகத்தியமலைசார் மக்கள் இயற்கை காப்பு மையம், தூத்துக்குடி முத்துநகர் இயற்கை சங்கம், திருநெல்வேலி, தூத்துக்குடி இயற்கை சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 5 குழுக்களாக 55 பேர் கொண்ட தன்னார்வலர்கள் 42 குளங்களில் கணக்கெடுப்பு மேற்கொண்டனர். நீர் இருப்பு உள்ள மணிமுத்தாறு அணை, கடனாநதி அணை மற்றும் அணைகளை அடுத்துள்ள குளங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊசிவால் வாத்து, நீலச்சிறகு, சில்லி தாரா, மூக்கன் தாரா, நீர்காகம், அரிவாள் மூக்கன், ஆலா உள்ளிட்ட 57 வகையான அரிய பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன.
மணிமுத்தாறு அணையில் அதிகபட்சமாக 2,863 பறவைகளும், கடனாநதி அணை பாசனக் குளங்களான ஆழ்வார்குறிச்சியிலுள்ள வல்லத்தான்குளம், தொண்டமான்குளம் ஆகிய  குளங்களில் 1,460 பறவைகளும், புத்தன்தருவை குளத்தில் 703 பறவைகளும், துப்பாகக்குடி குளத்தில் 437 பறவைகளும், திருநெல்வேலி நகரம் நயினார்குளத்தில் 364 பறவைகளும் உள்ளன.
வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால் குளங்கள் வறண்டு காணப்படுவதால் நிகழாண்டு பறவைகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. 3,911 வாத்து, 1,341 கொக்கு, 1,242 உள்ளான், 500 மூக்கன் தாரா, 200 சில்லி தாரா, 280 நீலச்சிறகு வாத்துகளும் வந்துள்ளன. கடந்த ஆண்டுகளில் அதிகளவில் பறவைகள் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் 12 குளங்களில் 571 பறவைகள் மட்டும் பதிவாகியுள்ளன.
வருகை குறைந்தது ஏன்? 2011 இல் 32,375 பறவைகளும், 2012 இல் 29,576 பறவைகளும், 2013 இல் 60,966 பறவைகளும், 2014 இல் அதிகபட்சமாக 67,194 பறவைகளும், 2015 இல் 34,189 பறவைகளும், 2016 இல் 22,676 பறவைகளும் பதிவு செய்யப்பட்டன. நிகழாண்டு மிகக் குறைவாக 8,256 பறவைகள் மட்டும் பதிவாகியுள்ளன.
நீர் நிலைகள் பராமரிப்பில்லாத நிலையில், நெய்வேலி காட்டாமணக்கு, சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அத்துடன் பாலிதீன், குப்பைகள், கழிவுகளாலும் நீர்நிலைகள் மாசுபட்டுக் காணப்படுகின்றன. குளங்களில் மீன்கள் உற்பத்தி குறைந்த காரணத்தாலும் பறவைகளின் வருகை குறைந்துள்ளது.
ஆகவே, நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com