சங்கரன்கோவிலில் விசைத்தறியாளர்கள் போராட்டம் வாபஸ்: இன்று முதல் தறிகள் இயங்கும்

சங்கரன்கோவிலில் 13 நாள்களாக நடைபெற்றுவந்த விசைத்தறித் தொழிலாளர்களின் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சங்கரன்கோவிலில் 13 நாள்களாக நடைபெற்றுவந்த விசைத்தறித் தொழிலாளர்களின் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  செவ்வாய்க்கிழமை முதல் தறிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறித் தொழிலுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை ரத்துச் செய்யக் கோரி விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.13 ஆவது நாளாக திங்கள்கிழமையும் அவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனிடையே, ஜி.எஸ்.டி. வரி மீதான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன் சங்கத் தலைவர் என்.கே.எஸ்.டி.சுப்பிரமணியன்,செயலர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன், பொருளாளர் முத்துசங்கரநாராயணன் மற்றும் விசைத்தறிக்குப் பாவு கொடுக்கும் அருப்புக்கோட்டை ஜவுளி உற்பத்தியாளர்கள், வீடு சார்ந்த சிறுவிசைத்தறியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது கூட்டத்தில் ஜி.எஸ்.டி.  எடுக்க வேண்டியதின் அவசியத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மேலும், சிறு விசைத்தறியாளர்கள் ஜி.எஸ்.டி. எடுத்தால்தான் அவர்களுக்கு பாவு மற்றும் நூல் கொடுக்கப்படும் எனக் கூறினர். இதற்கு சிறுவிசைத் தறியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்  சிறு சலசலப்பு ஏற்பட்டது.  
 துணி உற்பத்தியாளர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தினர். வீடு சார்ந்த சிறு விசைத்தறியாளர்கள் ஜி.எஸ்.டி. எடுத்தாலும், விசைத்தறிக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்ற   கொள்கையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. தொடர்ந்து போராடுவோம். அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலாவது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காத்திருக்கிறோம்  என்றனர்.
பின்னர்,  பிற்பகலில் மாஸ்டர்வீவர்ஸ் சங்க அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜி.எஸ். வரிவிதிப்பை ரத்துச் செய்யக்கோரி  கடந்த 13 நாள்களாக நடைபெற்றுவந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்கிழமை முதல் 10 ஆயிரம் பேர் பணிக்குத் திரும்புகின்றனர்.
இதனிடையே, 13 நாள்களாக நீடித்த  இப்போராட்டம் காரணமாக ரூ.13 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com