நெல்லையில் வியாபாரியைத் தாக்கி வழிப்பறி: பழைய ரூபாய் நோட்டுகள் ரூ. 3 கோடி மீட்பு: 12 பேர் கைது

திருநெல்வேலியில் வியாபாரியைத் தாக்கி பறிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.3 கோடியை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர். இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலியில் வியாபாரியைத் தாக்கி பறிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.3 கோடியை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர். இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (39). தனியார் காற்றாலை உரிமையாளரான இவர், வீட்டுமனைகள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தாராம். இவரிடம் ரூ.3 கோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தனவாம். இதனை மாற்றுவதற்கு நான்குனேரியைச் சேர்ந்த சுந்தர் (35), மேலப்பாளையம் அழகிரிபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் (48) ஆகியோரை தொடர்புகொண்டார். அவர்கள் அழைத்ததன்பேரில், கடந்த 14ஆம் தேதி திருநெல்வேலிக்கு பணத்துடன் பால்ராஜ் வந்தாராம்.
தச்சநல்லூரை அடுத்துள்ள சிதம்பரநகர் பகுதியில் வந்தபோது, பால்ராஜை தாக்கிவிட்டு ஒரு கும்பல் பணத்தைப் பறித்துச் சென்றது. இதற்கிடையே, ஜெயபாலின் மகனைக் கடத்தியதாக பால்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்ததோடு ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். பால்ராஜ் அளித்த புகாரின் திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.
பணம் பறிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக ஜெயபால், நாகர்கோவிலைச் சேர்ந்த பில்டன் (35), அமர்நாத் (46), தேவபிச்சை (41), ஷாம் செல்வநாயகம், அகஸ்தீசுவரம் பீட்டர் ஷியாம்குமார் (45) ஆகியோரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ் வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வந்த நிலையில், வடக்குவிஜயநாராயணத்தைச் சேர்ந்த கொம்பையா (35), தச்சநல்லூர் சிதம்பரநகரைச் சேர்ந்த முருகன் (58), அவரது மகன் வீரபத்திரன் (25), கீழநத்தம் கீழூரைச் சேர்ந்த சங்கரபாண்டியன் (35), திருநெல்வேலி நகரம் அருகேயுள்ள விளாகத்தைச் சேர்ந்த மாரிமுத்து (21), மேலநத்தத்தைச் சேர்ந்த ரங்கசாமி (29) ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதுதொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர்கள் கு.சுகுண சிங், பெரோஸ்கான் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருநெல்வேலியில் வியாபாரியைத் தாக்கி பழைய ரூபாய் நோட்டுகளை பறித்துச் சென்ற வழக்கில் மொத்தம் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.3 கோடி மீட்கப்பட்டுள்ளது. 6 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், 14 செல்லிடப்பேசிகள், இரு தங்கச் சங்கிலிகள், இரு பிரேஸ்லெட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ் வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. தனியார் நிதிநிறுவனங்களுக்கு தொடர்பு உள்ளதா அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து முழுமையான விசாரணை முடிந்ததுமே தெரியவரும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com