பிஎஸ்என்எல் தரைவழி, அகண்ட அலைவரிசை: மறு இணைப்புக்கு 11 இடங்களில் சிறப்பு முகாம்: அமைப்புக் கட்டணம், முதல் மாத வாடகை தள்ளுபடி

துண்டிக்கப்பட்ட பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி மற்றும் அகண்ட அலைவரிசை சேவைகளின் மறுஇணைப்புக்கான அமைப்புக் கட்டணம், முதல் மாத பிளான் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்ட பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி மற்றும் அகண்ட அலைவரிசை சேவைகளின் மறுஇணைப்புக்கான அமைப்புக் கட்டணம், முதல் மாத பிளான் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இதற்காக 11 இடங்களில் சிறப்பு மேளா நடத்தப்படவுள்ளதாக திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்ட பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ப. முருகானந்தம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பயன்பாட்டில் உள்ள தரைவழி வாடிக்கையாளர்களுக்காக ஃபிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைவோர் குறிப்பிட்ட கட்டணங்கள் செலுத்தி தங்களுடைய தரைவழி தொலைபேசி எண்ணுடன் 1 முதல் 3 தரைவழி தொலைபேசி அல்லது செல்லிடப்பேசி எண்களை இணைத்து அளவில்லா அழைப்பு வசதியைப் பெற முடியும். இதற்கு ஒரு எண்ணுக்கு ரூ.21, 2 எண்களுக்கு ரூ.39, 3 எண்களுக்கு ரூ.49 என மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்மூலம், எல்லா நாள்களிலும், எல்லா நேரத்திலும் அளவற்ற நேரம் இலவசமாக பேசலாம்.
மேலும், எந்தவித அதிக கட்டணங்களின்றி ரூ.675-க்கு மேல் மாத வாடகை உள்ள அகண்ட அலைவரிசை இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச வேகத்தை இரு மடங்காக உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் இணைப்புகளிலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைப்பு பெற விரும்பினால், அவர்களுக்கு மறுஇணைப்பு கட்டணம் மற்றும் நிறுவல் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும், முதல் மாத வாடகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த சிறப்பு சலுகைகள் செப். 13ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
இதேபோல, ஓராண்டு வாடகை திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத வாடகை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். 2 ஆண்டு திட்டத்தில் இணைவோருக்கு 3 மாத வாடகை தள்ளுபடி செய்யப்படும். 3 ஆண்டு திட்டத்தில் இணைவோருக்கு 6 மாத வாடகை தள்ளுபடி செய்யப்படும்.
சிறப்புச் சலுகைகளை நுகர்வோர் பெறுவதற்கு வசதியாக சிறப்பு மேளாக்கள் நடத்தப்படவுள்ளன. ஜூலை 19, 26 ஆகிய தேதிகளில் மாநில அளவில் மெகா மேளா நடைபெறும். மாவட்ட அளவில் வரும் 18ஆம் தேதி முக்கூடல், சாந்திநகர் தொலைபேசி நிலையத்தில் மேளா நடைபெறும். 19ஆம் தேதி செங்கோட்டை, 20ஆம் தேதி சங்கரன்கோவில், வள்ளியூர், 21ஆம் தேதி தென்காசி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை (தெற்கு) தொலைபேசி நிலையங்களில் சிறப்பு மேளா நடைபெறும். வரும் 22ஆம் தேதி பேட்டை, 25ஆம் தேதி சங்கர்நகர், ஏர்வாடி தொலைபேசி நிலையங்களில் சிறப்பு மேளா நடைபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com