நயினார்குளத்தில் தடுப்புச்சுவர்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

திருநெல்வேலி நயினார்குளத்தில் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

திருநெல்வேலி நயினார்குளத்தில் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் திருநெல்வேலி நயினார்குளம் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு:
திருநெல்வேலி நயினார்குளம் சுமார் 235 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதன் மூலம் 539 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இக் குளத்தின் கிழக்கு மற்றும் தெற்கு கரைகளில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளிலும் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். மொத்தமுள்ள 9 பாசன மடைகளில் 7ஆவது மடை சுமார் 18 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேலும், இப் பகுதியில் ஆக்கிரமிப்பும் உள்ளது. அதை அப்புறப்படுத்துவதோடு மடையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் குளத்தை குடிமராமத்தில் தூர்வாரி சீரமைக்க பொதுப்பணித்துறையினர் ரூ.24 லட்சம் ஒதுக்கியுள்ளனர். இந்தத் தொகையை உயர்த்த வேண்டும். இப் பகுதியில் சாகுபடி காலத்தில் தினமும் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வயல்களுக்கு வந்து செல்வார்கள். அப்படியிருக்கையில் குளத்தின் கரைஅருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க முயற்சித்து வருகிறார்கள். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வேலை வழங்கக் கோரிக்கை: பாளையங்கோட்டை அருகேயுள்ள மணப்படைவீடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு: மணப்படை வீடு பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஊராட்சி அலுவலகத்தின் கீழ் எங்கள் கிராமத்தில் இருந்து 600 பேர் வரை மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் தினமும் பணியாற்றி வந்தோம். இப்போது 400-க்கும் குறைவானவர்களுக்கே பணி வழங்குகிறார்கள். ஏற்கெனவே வறட்சி காரணமாக விவசாயப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் வேலைஉறுதித் திட்ட பணியை நம்பி ஏராளமானோர் உள்ளோம். ஆகவே, முறையாக அனைவருக்கும் வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பை-கழிவுநீரால் அவதி: திருநெல்வேலி நகரம் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு:
திருநெல்வேலி மாநகராட்சியின் 44 ஆவது வார்டுக்குள்பட்ட தடிவீரன் கோயில் மேலத்தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு குப்பைத்தொட்டிகள் வைக்கப்படாததால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதேபோல ரேஷன்கடை அருகேயுள்ள படித்துறை பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசுஉற்பத்தி அதிகரித்து துர்நாற்றம் வீசி வருகிறது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. ஆகவே, புதிதாக குப்பைத்தொட்டி வைக்கவும், கழிவுநீர் தேங்காமல் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com