தாமிரவருணியைப் பாதுகாக்க களமிறங்கிய கிராம மக்கள்: 3 கி.மீ. தொலைவுக்கு சீரமைக்க முடிவு

திருநெல்வேலி அருகே தங்களது சொந்த செலவில் தாமிரவருணி நதியைப் பாதுகாக்க கிராம மக்கள் களமிறங்கினர்.

திருநெல்வேலி அருகே தங்களது சொந்த செலவில் தாமிரவருணி நதியைப் பாதுகாக்க கிராம மக்கள் களமிறங்கினர். முதல் கட்டமாக பொக்லைன் உதவியுடன் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு அமலைகளை அப்புறப்படுத்தும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர்.
பொதிகை மலையில் உற்பத்தியாகி புன்னக்காயல் கடலில் கலக்கும் தாமிரவருணி நதியின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடிநீர் பெற்று வருகிறார்கள். நெல், வாழை, கரும்பு, மஞ்சள், உளுந்து, சிறுபயறு உள்ளிட்டவையும் தாமிரவருணி நதி பாசனத்தால் சாகுபடி செய்யப்படுகின்றன. அமலைச்செடிகள், கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்புகளால் தாமிரவருணி நதி பாழ்பட்டு வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அரசு சார்பில் இதற்கென பிரத்யேக திட்டங்கள் வகுக்கப்பட வில்லை.
பொதுமக்கள் களமிறங்கினர்: 2016ஆம் ஆண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டபோதிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில நாள்கள் பெய்த மழையால் பிரதான அணைகளில் குடிநீர்ப் பற்றாக்குறையை ஓரளவு சரிகட்டும் வகையில் நீர் இருப்பு உள்ளது. இருப்பினும் சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளுக்கு தாமிரவருணி நீர் வந்து சேரும் போது கழிவுநீர் கலப்பால் கலங்கலான நீராக வருகிறது.
இந்நிலையில் தாமிரவருணி பாதுகாப்பு இயக்கம், கருப்பந்துறை ஊர் பொதுமக்கள் சார்பில் சொந்த செலவில் தாமிரவருணியில் உள்ள அமலைச் செடிகளை அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தாமிரவருணி பாதுகாப்பு இயக்க செயற்குழு உறுப்பினர் அந்தோணி குரூஸ் பணிகளைத் தொடங்கிவைத்தார். அருள்பணியாளர் மை.பா. ஜேசுராஜ் தலைமையில் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆற்றுக்குள் இறங்கி அமலைச்செடிகள், கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். பிளாஸ்டிக், துணிக் குப்பைகளையும் சேகரித்து ஆற்றில் இருந்து வெளியேற்றினர்.
படித்துறைகள் தேவை: இதுகுறித்து கருப்பந்துறை ஊர்த் தலைவர் ரவி கூறியதாவது: திருநெல்வேலி மாநகராட்சியின் 38 ஆவது வார்டு பகுதியில் கருப்பந்துறை கிராமம் உள்ளது. 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தாமிரவருணி தண்ணீரே பிரதானம். குடிநீருக்கு இங்கு அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் இருந்துதான் தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால், அமலைச்செடிகள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் கலங்கி வருகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். தாமிரவருணியைச் சீரமைக்கக்கோரி மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து முதல்கட்டமாக ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் பொக்லைன் மற்றும் மக்கள் சக்தியைக் கொண்டு நதியைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
எங்கள் பகுதியில் உறைகிணறுகளைச் சீரமைக்கவும், கூடுதலாக சிறுமின்விசை குடிநீர்த் தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரவருணி நதியோரம் படித்துறைகள் இல்லாததால் பெண்கள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே, கருப்பந்துறையில் படித்துறை கட்ட அரசு நிதி ஒதுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com