வறட்சி நிவாரணத்தை அபகரிக்கும் வங்கி நிர்வாகங்கள்: குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் வறட்சி நிவாரணத் தொகையை விவசாயிகளின்

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் வறட்சி நிவாரணத் தொகையை விவசாயிகளின் பிற கடன்களைக் காரணம் காட்டி வங்கி நிர்வாகங்கள் அபகரிக்கும் நிலை உள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ஆட்சியர் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு.
விவசாயிகள்:  வறட்சியால் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் விவசாயக் கடன்களைச் செலுத்துமாறு வங்கிகள் நிர்பந்திக்கின்றன. தமிழக அரசு சார்பில் வறட்சி நிவாரணம் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் சூழலில் பிற கடன்களைக் காரணம் காட்டி அத் தொகையை அபகரிக்கிறார்கள். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர்: வங்கிகளிடம் வறட்சிக் காலத்தில் பயிர்க் கடன்களைச் செலுத்தக் கோரி நிர்ப்பந்திக்கக் கூடாது என அறிவுறுத்தப்படும்.
விவசாயிகள்: நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு  வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மா, தென்னை உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் சாகுபடியும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கும் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆட்சியர்: தோட்டப் பயிர்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க அரசுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. தகுந்த உத்தரவு வந்ததும் மாவட்டத்தில் அதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படும்.
விவசாயிகள்: களக்காடு ஒன்றியத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பகுதிகளில் வாழை பயிரிடப்பட்டு வருகிறது. விளைச்சல் அதிகமான நேரத்தில் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள். அதனால் வாழைப் பயிர் செய்யும் விவசாயிகள் உரிய விலை கிடைக்காமலும், அடிப்படைச் செலவுகளுக்கு விலை கிடைக்காமலும் துன்பத்துக்கு ஆளாகிறார்கள். ஆகவே, வாழை கொள்முதல் நிலையமும்,குளிர்பதனக் கிட்டங்கியும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள்: விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
விவசாயிகள்: 2016 ஆம் ஆண்டு கார் பருவத்தில் சிவசைலம்,ஆழ்வார்குறிச்சி,ஆம்பூர், தர்மபுரம்மடம்,காக்கநல்லூர்,மன்னார்கோவில் பகுதிகளில் நெல் பயிர்கள் முற்றிலும் கருகின. அதற்கான நிவாரணம் முறையாக வழங்கப்படாமல் உள்ளது.சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள்: வறட்சி நிவாரணம் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com