எஸ்எஸ்எல்சி: நெல்லை மாவட்டத்தில் 96.35% தேர்ச்சி: மாநில தர வரிசையில் முன்னேற்றம்

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டம் 96.35 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 1.05 சதவீதம் அதிகம்.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டம் 96.35 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 1.05 சதவீதம் அதிகம். இருப்பினும், மாநில அளவில் 16ஆவது இடத்திலிருந்து 12ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் 2016-17ஆம் கல்வியாண்டுக்கு 150 தேர்வு மையங்களில் 474 பள்ளிகளைச் சேர்ந்த 45,622 மாணவர், மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயபாண்டி, வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இதில், மாவட்டத்தில் மொத்தம் 43,955 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.35 சதவீதமாக உள்ளது. மாணவர்களில் 22,260 பேர் தேர்வு எழுதி, 21,062 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் (94.62 சதம்). மாணவிகளில் 23,362 பேர் தேர்வு எழுதி, 22,893 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் (97.99 சதம்). சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 14,657 பேர் தேர்வு எழுதியதில், 14,021 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.66 ஆகும். தென்காசி கல்வி மாவட்டத்தில் 14,889 பேர் தேர்வு எழுதியதில், 14,472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 97.20 ஆகும். திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் 16,076 பேர் தேர்வு எழுதியதில் 15,462 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 96.18 ஆகும்.
2016இல் தேர்ச்சி சதவீதம் 95.30 ஆக பெற்று 16ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், நிகழாண்டு தேர்ச்சி சதவீதம் 96.35 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாநில தர வரிசையில் 16ஆவது இடத்தில் இருந்து 12ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாவட்ட வாரியாக வழங்கப்படும் மாநில தர வரிசைப் பட்டியலிலும் 18ஆவது இடத்தில் இருந்து 11ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக (2014 தவிர்த்து) தொடர்ச்சியாக தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருவது ஆறுதலை அளிக்கிறது. 2011இல் 88.66 சதம், 2012இல் 88.70 சதம், 2013இல் 92.86, 2014இல் 91.98, 2015இல் 94.23, 2016இல் 95.30 சதம், 2017இல் 96.35 சதம் என தேர்ச்சி விழுக்காடு உயர்ந்த வண்ணம் உள்ளது.
100 சதவீத தேர்ச்சி: மாவட்டத்தில் உள்ள 474 பள்ளிகளில் 221 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளி, மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள், சமூக நலத்துறை, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் என மொத்தம் 43 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் 62 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இவை தவிர 116 மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மத்திய சிறை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள 24 பேர் 2016-17ஆம் கல்வியாண்டுக்கான எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதினர். இதில், 22 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், அபுபக்கர் சித்திக் அலி 500-க்கு 422 மதிப்பெண்களும், கண்ணன் 400 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சதம் அடித்த 43 அரசு பள்ளிகள்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களையும் சேர்த்து எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 43 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதன் விவரம்:
பத்தமடை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி, சமூகரெங்கபுரம் எஸ்எம்ஆர் அரசு மேல்நிலைப் பள்ளி, சேரன்மகாதேவி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மதகனேரி அரசு உயர்நிலைப் பள்ளி, தெற்கு கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆதிகுறிச்சி, கரையாணஅடி, கஸ்தூரிரெங்கபுரம், மணிமுத்தாறு, காவூர், வடக்கு விஜயநாராயணம், கொழியங்குளம், காவல்கிணறு, சண்முகபுரம், மாஞ்சோலை அரசு உயர்நிலைப் பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தென்மலை அரசு மேல்நிலைப் பள்ளி, பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, வீராணம் அரசு மேல்நிலைப் பள்ளி, சீவநல்லூர் எலத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி, அயன் குரும்பலாபேரி, இடைகால், பாலபதிராமபுரம், கட்டளைகுடியிருப்பு, பொய்கை, அயோத்தியாபுரிபட்டணம், மேலப்பிள்ளையார்குளம், சத்திரம்குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளிகளும் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும், வலசை அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி, தேவர்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, கங்கைகொண்டான், வெற்றிலிங்கபுரம், கம்மாளன்குளம், தருவை, பள்ளமடை, செட்டிகுறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளிகள், திருநெல்வேலி நகரம் ஜவஹர் அரசு உயர்நிலைப் பள்ளி, நல்லம்மாள்புரம் டாக்டர் அம்பேத்கர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி, முன்னீர்பள்ளம் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 43 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


சமூக அறிவியலில் 3,781 பேர் சதம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 45,622 மாணவர், மாணவிகளில் 3,781 பேர் சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அறிவியலில் 1,413 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 737 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடங்களில் யாரும் 100 மதிப்பெண் பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com