குளங்கள், கால்வாய் குடிமராமத்து பணிகளில் திருப்தியில்லை: குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

திருநெல்வேலி மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்களைத் தூர்வாரும் வகையில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகள் திருப்திகரமாக

திருநெல்வேலி மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்களைத் தூர்வாரும் வகையில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகள் திருப்திகரமாக இல்லை. அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ஆட்சியர் மு.கருணாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, வேளாண்மை துணை இயக்குநர் கனகராஜ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கண்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
விவசாயிகள்: திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன. குளங்களில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தாமல் கரையில் வைத்துவிட்டனர். இதனால் மழைக் காலங்களில் மண் குளத்துக்குள் சரிந்து விழும் சூழல் உள்ளது. பல இடங்களில் பராமரிப்புப் பணி திருப்திகரமாக இல்லை. இது குறித்து ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர்: நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், விவசாயத்துக்கு உதவவும் குடிமராத்துப் பணிகள் அவசியம். வருங்காலங்களில் பணிகள் நடக்கும் பகுதியில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்து சிறப்பாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள்: நெல்,உளுந்து,கடலை,சோளம் உள்ளிட்ட
பயிர்களுக்கு விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர்.
வறட்சியால் அனைத்து பயிர்களும் சேதமான நிலையில் கணக்கெடுப்புப் பணிகள் முடிந்து இதுவரை காப்பீட்டுத் தொகை வந்து சேராமல் உள்ளது. அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள்: இம் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான தொகை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள்: ஆம்பூர்,ஆழ்வார்குறச்சி,சம்பன்குளம், அயன்திருவாலீஸ்வரம்,கோவிந்தபேரி,காக்கநல்லூர்,மன்னார்கோவில்,வாகைகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கார்பருவ சாகுபடியில் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்காக ரூ.1 கோடியே 40 லட்சத்து 79 ஆயிரத்து 870 நிவாரணத் தொகை வழங்க கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள்: அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரை அனுப்பியுள்ள நிலையில், தொகை கிடைத்ததும் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விவசாயிகள்: கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உள்பட்ட மலையடிவாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தோட்டப்
பயிர்கள்,நெல்,வாழை போன்றவற்றை சாகுபடி செய்து வருகிறார்கள். வனப் பகுதியில் தண்ணீர் வசதியில்லாததால் அங்கிருந்து வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க வேண்டும்.
அதிகாரிகள்: வனப் பகுதியில் தேவையான தண்ணீர் வசதியை ஏற்படுத்த அறிவுறுத்தப்படும்.
விவசாயிகள்: தென்னை, மா உள்ளிட்ட நீணடகால பயிர்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால்,அவற்றிற்கு உரிய நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். இக் கோரிக்கையை பலமுறை வலியுறுத்தியும் இதுவரை கணக்கெடுப்பு நடைபெறவில்லை.
அதிகாரிகள்: இதுதொடர்பாக வருவாய் நிர்வாக அலுவலருக்கு நேர்முகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் கணக்கெடுப்புப் பணிகள் முடித்து நிவாரணம் வழங்கப்படும் என்றனர்.

51 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
இக் கூட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 429 மனுக்களில் வேளாண்மையைச் சேர்ந்த 187 மனுக்கள்,வேளாண்மை சாராத 242 மனுக்களுக்கு பதில்கள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தோட்டக்கலை பொருள்களைச் சந்தைப்படுத்தும் திட்டத்தின் கீழ் காய்கறி விற்பனை தள்ளுவண்டி தலா ரூ.15 ஆயிரம் மானியத்தில் 10 பேருக்கும், வேளாண்மை துறையின் மூலம் நுண்ணீர் பாசன கருவிகள் 4 பேருக்கும்  ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 314 மதிப்பில் வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் 2 பேருக்கு மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு விதைகளையும், 35 பேருக்கு வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் கால்நடைகளுக்கான உலர் தீவனமும் என மொத்தம் 51 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கோடை பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரங்களுக்கு நேரடி அரசு மானியம் வழங்கும் திட்டம் 01.06.2017 முதல் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு ஆதார் அட்டை அவசியமாகும். கடந்த மாதம் விதை ஆய்வாளர்கள் 283 விதை விற்பனை நிலையங்களை  ஆய்வு செய்துள்ளனர். 2016-2017 ஆம் ஆண்டில் 26 தரம் குறைந்த விதைகள் விற்பனை செய்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 18 விதை விற்பனை நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com