இலங்கை கிழக்கு பல்கலை.-சுந்தரனார் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்:  இருநாட்டு மாணவர்களும் பயன்பெற வாய்ப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், இலங்கையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், இலங்கையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் இருநாட்டு மாணவர்களும் பயன்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அ.ஜான் டி பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், இலங்கையின் மட்டக்களப்பில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகமும் கடந்த 9 ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளன.  இலங்கையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி.பாஸ்கர், இலங்கை கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெயசிங்கம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இறுதி செய்தனர். நிகழ்ச்சியில் சுந்தரனார் பல்கலைக்கழகத்தன் அயல்நாட்டு விவகாரப் பிரிவு இயக்குநர் பலவேசம், தமிழியல் துறைப் பேராசிரியரும், மொழிப்புல முதன்மையருமான ஞா.ஸ்டீபன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை வளப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரை இரு பல்கலைக்கழகங்களும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளவும் ஆய்வுகள், வெளியீடுகள் ஆகியவற்றில் இணைந்து செயலாற்றவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிகழாண்டு டிசம்பரில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சார்பில் நடைபெறும் நாட்டார் வழக்காற்றியல் பயிலரங்கத்தில் முதன்மை வல்லுநராக சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் ஞா.ஸ்டீபன் பங்கேற்க உள்ளார். தொடர்ந்து சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை சார்பில் 2018 பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள உலகத் தமிழிலக்கிய வரைபடம் என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்றைகள் புலத்தின் 20 மாணவர்களும், இரண்டு பேராசிரியர்களும் பங்கேற்க உள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமான நாளிலேயே இருபல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அறிவுசார் பகிர்வுக்கானச் செயல்பாடுகள் தொடக்கம் பெற்றிருப்பது வரவேற்கத்தகுந்தது.
இப் பல்கலைக்கழகத்துடன்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இப்போது இப் பல்கலைக்கழகத்தில் கனடா மற்றும் இலங்கையிலிருந்து முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் இரு மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள்.
அண்மையில் நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் குற்றவியல் மற்றும் குற்றநீதியியல் துறையில் சிறந்து விளங்கும் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக்கொள்ள  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்றநீதியியல் துறைத் தலைவி முனைவர் பியூலா சேகர் மேற்கொள்கிறார் எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com