காந்தி சிலைக்கு மாலை அணிவித்த தேமுதிகவினர் மீது வழக்கு: ஆய்வாளர், எஸ்ஐ மீது நடவடிக்கை கோரி ஆணையரிடம் மனு

திருநெல்வேலியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிகவினர் மீது வழக்குப் பதிந்துள்ள

திருநெல்வேலியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிகவினர் மீது வழக்குப் பதிந்துள்ள ஆய்வாளர், சார்பு-ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி மாநகரக் காவல்துறை ஆணையரிடம் தேமுதிக வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
தேமுதிக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலரும் வழக்குரைஞருமான கே. ஜெயபாலன், வழக்குரைஞர் அணிச் செயலர் பி. காந்தி, வழக்குரைஞர்கள் என். ஜீவானந்தம், ஏ. ஆவுடையப்பன் ஆகியோர், மாநகரக் காவல்துறை ஆணையரிடம் அளித்த மனு:
கடந்த 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டும், காமராஜர் நினைவு நாளையொட்டியும் தேமுதிக சார்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க கட்சியினர் அவரவர் வாகனங்களில் வந்தனர்.
பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் அளிக்காமல் இதர கட்சியினர் வந்து சென்றதைப் போன்று தேமுதிகவினரும் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்துச் சென்றனர். ஆனால், இதர கட்சியினர் மீது வழக்குப் பதியாத திருநெல்வேலி நகர காவல் நிலையத்தினர், தேமுதிகவினர் மீது மட்டும் உள்நோக்கத்துடன் வழக்குப் பதிந்துள்ளனர். மகாத்மா காந்தி பிறந்த நாளில் திருநெல்வேலி நகரப் பகுதியில் சட்ட ரீதியாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் தேமுதிகவினர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். எனவே, திருநெல்வேலி நகர காவல்நிலைய ஆய்வாளர், சார்பு-ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com