பிசான சாகுபடி: பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் திறப்பு

பிசான சாகுபடிக்காக பாபநாசம்,  மணிமுத்தாறு,  சேர்வலாறு அணைகளிலிருந்து வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.

பிசான சாகுபடிக்காக பாபநாசம்,  மணிமுத்தாறு,  சேர்வலாறு அணைகளிலிருந்து வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேரடிப் பாசனத்தில் 86,107 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும்.
திருநெல்வேலிலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டும்,  நிகழாண்டும் இதுவரை போதிய மழை இல்லாததால் 2 பிசான பருவம், ஒரு கார் பருவத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே,  மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சில நாள்களாக பெய்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு,  சேர்வலாறு உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதனால், நிகழாண்டு பிசான சாகுபடிக்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று,  அணைகளைத் திறக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி,  வியாழக்கிழமை (அக். 5) பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் திறக்கப்பட்டன. பாபநாசம் அணையிலிருந்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி தண்ணீர்  திறந்துவிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இப்போது திறக்கப்படும் தண்ணீர் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு, தெற்கு கோடைமேலழகியான் கால்வாய்கள், கன்னடியன் கால்வாய்,  கோடகன் கால்வாய், பாளையங் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் உள்ளிட்ட 7 கால்வாய்கள் மூலம் 40,000 ஏக்கர் விவசாய நிலமும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் கீழக்கால், மருதூர் மேலக்கால், தெற்கு, வடக்கு பிரதான கால்வாய்கள் மூலம் 46,107 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்.
மேலும், இந்நீரைக் கொண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே, விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
பருவமழை தேவையான அளவு பெய்யும் பட்சத்தில் தண்ணீர் திறக்கும் அளவு மாற்றியமைக்கப்படும். மேலும், பாபநாசம்,  மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளிலிருந்து 31.3.18 வரை 178 நாள்களுக்கு 12,421 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் அணையின் நீர்இருப்பைப் பொருத்து தண்ணீர் திறக்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் பேரவை உறுப்பினர் ஆர். முருகையாபாண்டியன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ்,  உதவி ஆட்சியர் இளம்பகவத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி,  தாமிரவருணி வடிநீர்க் கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், வேளாண் இணை இயக்குநர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜ் பழனிவேல், அண்ணாதுரை,  நட்டார்,  உதவிப் பொறியாளர்கள் ஆதிமூலம்,  மகேஸ்வரன், மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன்,  உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன்,  சண்முகராஜன்,  அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கட்ராமன்,  விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன்,  உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சீனிவாசன்,  மகாகிருஷ்ணன்,  பொதுப்பணி, மின்வாரியம், வேளாண், வருவாய்த் துறை, நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
வியாழக்கிழமை நிலவரப்படி, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 91.10 அடியாகவும், 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 87.53 அடியாகவும், 118 அடி கொள்ளளவு கொண்ட  மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 47.78 அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com