இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசாரம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்ட விழிப்புணர்வு பிரசாரம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்ட விழிப்புணர்வு பிரசாரம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
அக்.1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பிரசார ரதத்தின் தொடக்க விழா, ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ரதத்தை தொடக்கி வைத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியது:
வேலையில்லாத கிராமப்புற இளைஞர்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும், திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து சுயதொழில்கள் தொடங்கவும் தீனதயாள் உபாத்யாய கிராமின் சௌசல்யா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள 425 ஊராட்சிகளிலும் கிராமந்தோறும் சென்று இளைஞர்களிடையை திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரதம் செல்லும் கிராமங்களில் 18 முதல் 35 வயது பூர்த்தியடைந்த அனைவரையும் இத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இளைஞர்களின் செல்லிடப்பேசி செயலியில் அவரவர் சுய குறிப்பை பதிவு செய்து திட்டத்தின் இணையதள முகவரிக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம். அனைத்து கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், அனைத்து ஊராட்சிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ. பழனி, உதவி ஆட்சியர் இளம்பகவத், மகளிர் திட் அலுவலர் கெட்ஸி லீமா அமலினி மற்றும் ஊரக வளர்ச்சிப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com