நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவியியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவியியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.
தமிழகத்தின் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் பயிற்சிப் பள்ளி அமைந்துள்ள கல்லூரிகளில் 2017-18 ஆம் ஆண்டுக்கான செவிலியர் பட்டயப் படிப்புக்கான (டிப்ளமோ நர்சிங்) விண்ணப்பங்கள் விநியோகம் புதன்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விண்ணப்ப விநியோகத்தை கல்லூரி முதல்வர் சித்தி அத்திய முனவரா தொடங்கி வைத்தார். அவர் கூறியது:  செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்கள் தவிர மற்ற நாள்களில் இம் மாதம் 21 ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலக கட்டடத்தில் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 31-12-2017 இல் குறைந்தபட்சமாக 17 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 35 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில மேல்நிலைக் கல்விக் குழுமத்தால் நடத்தப்படும் மேல்நிலைப் பள்ளிக் கல்விச் சான்றிதழ் தேர்வில் அல்லது அதற்கு இணையான தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியின வகுப்பினர் விண்ணப்பங்களை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பெறலாம். விண்ணப்ப மனுவுடன் சாதிச் சான்றிதழ் 2 நகல்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதர வகுப்பினர் கோரிக்கை மனுவுடன் ரூ.300 வரைவோலை சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலர், தேர்வுக்குழு, 162 ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு இம் மாதம் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் ரேவதி பாலன், நிர்வாக அலுவலர் சு.செல்லப்பா, இளநிலை நிர்வாக அலுவலர் ஆ.செந்தில்வேல், அலுவலக கண்காணிப்பாளர் செல்லையா, இளநிலை உதவியாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com