ஆலங்குளத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

ஆலங்குளத்தில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி புதுப்பட்டி கிராம மக்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குளத்தில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி புதுப்பட்டி கிராம மக்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குளத்தில் 7 மதுக்கடைகள் இருந்த நிலையில், நெடுஞ்சாலையோரத்தில் உள்ள கடைகளை அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழக அரசு மாநில நெடுஞ்சாலைகள் சிலவற்றை மாவட்ட சாலைகளாக மாற்றி அவற்றில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டதையடுத்து, ஆலங்குளத்தில் புதுப்பட்டி சாலை, அம்பாசமுத்திரம் சாலை மற்றும் திருநெல்வேலி சாலை ஆகிய இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள மதுக்கடை குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளதால் அதை திறக்கக் கூடாது என பொதுமக்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக அது மூடப்பட்டது.
புதுப்பட்டி சாலையில் உள்ள கடை விவசாய நிலங்களுக்கு அருகில் இருப்பதாலும், புதுப்பட்டியில் இருந்து பள்ளி,  கல்லூரி மாணவர்கள் ஆலங்குளத்திற்கு வந்து செல்லும் சாலை என்பதாலும் இதை அடைக்க வலியுறுத்தி கடை திறக்கப்பட்ட அன்றே புதுப்பட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை அடைக்க வலியுறுத்தி எம்.பி. பிரபாகரனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், தற்போது வரை கடை அடைக்கப்படாததால்,  புதுப்பட்டி கிராம மக்கள், அப்பகுதி விவசாயிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர்,  டாஸ்மாக் கடை முன் அமர்ந்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ஆலங்குளம் வட்டாட்சியர் சுப்புராயுலு,  காவல் ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர்தான் முடிவு எடுக்க முடியும் என்பதால், தாற்காலிகமாக வியாழக்கிழமை மட்டும் கடை அடைக்கப்பட்டது. எனினும் மாலை வரை டாஸ்மாக் மண்டல மேலாளர் வராததால் இரவு 7 மணி வரை பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்தது. டாஸ்மாக் மண்டல மேலாளர் வெள்ளிக்கிழமை வந்தவுடன் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என வட்டாட்சியர் கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com