கூடங்குளம் அணு உலை திட்ட மொத்த மதிப்பில் 60% பாதுகாப்புக்கு ஒதுக்கீடு: "14 ஆண்டு தொடர் ஆய்வில் கதிரியக்க தாக்கம் ஏதுமில்லை'

கூடங்குளம் அணு உலை திட்டத்துக்கான மொத்த மதிப்பில் (ரூ.20,500 கோடி) 60 விழுக்காடு தொகை அணு உலை மற்றும் சுற்றுப் பகுதி மக்களின் பாதுகாப்பு அம்சங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலை திட்டத்துக்கான மொத்த மதிப்பில் (ரூ.20,500 கோடி) 60 விழுக்காடு தொகை அணு உலை மற்றும் சுற்றுப் பகுதி மக்களின் பாதுகாப்பு அம்சங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 14 ஆண்டுகளாக பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நடத்திய தொடர் ஆய்வில் கூடங்குளம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் அணு உலையால் எந்தவித கதிரியக்க தாக்கமும் இல்லை என அறிவியல் விஞ்ஞானி பி. சுந்தரராஜன் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையமும், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியின் வேதியியல் ஆராய்ச்சித் துறையும் இணைந்து அணுசக்தியும்-சுற்றுச்சூழலும் எனும் தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கை வியாழக்கிழமை நடத்தின.
கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்க நிகழ்வுக்கு தலைமை வகித்து கல்லூரி முதல்வர் எஸ். ஜான் கென்னடி வேதநாதன் பேசியது:
நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் இருந்த மின் தேவையுடன், இப்போதைய தேவையை ஒப்பிடுகையில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், அதற்கேற்ப உற்பத்தியில்லை. வளர்ந்த நாடுகள் பலவும் மின் உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றுள்ளன. எந்த நாட்டில் தடையில்லா மின்சாரம் ஆண்டு முழுவதும் கிடைக்கிறதோ அந்த நாடு வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படுகிறது. இந்தியாவில் அத்தகைய நிலையை ஏற்படுத்த அணுசக்தி மின்சாரம் சாத்தியமானது என ஆய்வு செய்து, அணு உலைகள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டமைக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு அணு உலைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், அறிவியல் பயிலும், குறிப்பாக வேதியியல் மாணவர்கள் உண்மையை அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதற்காகவே இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது என்றார் அவர்.
கூடங்குளத்தில் இயங்கி வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வக அறிவியல் விஞ்ஞானி பி. சுந்தரராஜன் பேசியது:
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலையானது 2013 முதல் தனது உற்பத்தியை தொடங்கியது. ஆனால், அதற்கு முன்னதாக 2004ஆம் ஆண்டு தொடங்கி 2013 வரையில் தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1,200 மாதிரிகள் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) சேகரிக்கப்பட்டன. கூடங்குளம் அணு உலை வளாகம், அதன் சுற்றுப் பகுதி கிராமங்கள் என 4 திசைகளிலும் சுமார் 32 கி.மீ. தொலைவுக்கு சென்று காற்று, நீர், மண் என மூன்று படிமங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல, 2013இல் அணு உலை இயங்கிய பிறகு கடந்த 4 ஆண்டுகளும் தொடர்ச்சியாக அதே இடங்களில் ஆண்டுதோறும் 1,200 மாதிரிகள் எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காற்று, நீர், மண் ஆகிய மூன்று படிமங்களில் நிலைத்துள்ள ஆல்பா, பீட்டா, காமா உள்ளிட்ட கதிரியக்க அளவுகளை கணக்கிட்டதில் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. காற்றில் இயற்கையாக உள்ள கதிரியக்கம் மட்டுமே இருந்தது. இதேபோல மண், தண்ணீர் மாதிரிகளிலும் இயற்கையான கதிரியக்கம் மட்டுமே இருந்தது.
மேலும், காற்றை மையமாக கொண்டு உயிர் வாழும் உயிரினங்களுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. இதேபோல, மண்ணை ஆதாரமாக கொண்டு விளையும் அனைத்து வகைப் பயிர்களுக்கும் பாதிப்பு இல்லை. கடல் நீரை ஆதாரமாகக் கொண்டு வாழும் மீன், நண்டு உள்ளிட்ட அனைத்து கடல் வாழ் உயிரினங்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. மாறாக மூன்று நிலைகளிலும் ஆதாரமாகக் கொண்டு உயிர்வாழும் அனைத்து உயிரினங்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பட்டாம்பூச்சிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
அணு உலைகள் அமைந்துள்ளதால் கூடங்குளம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் எந்தவித கதிரியக்க பாதிப்பும் இல்லை என்பது அறிவியல்பூர்வ ஆய்வுரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உலையானது மூன்றாம் தலைமுறை உலையாகும். ஏற்கெனவே நிகழ்ந்த விபத்துகளைக் கணக்கிட்டு அதீத பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. உலையின் திட்ட மதிப்பீடான ரூ.20,500 கோடியில் 60 விழுக்காடு பாதுகாப்பு அம்சங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு யூனிட் ரூ.4.06 பைசாவுக்கு வழங்கப்படுகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானது என்றார் அவர்.
கூடங்குளம் அணு உலையின் வேதியியல் ஆய்வுக் கூட அறிவியல் விஞ்ஞானி எஸ். கணேஷ், உதவிப் பேராசிரியர் அந்தோனி டேனிஷ் ஆகியோர் அணுசக்தியும் சுற்றுச் சூழலும் குறித்து விளக்கமளித்தனர். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் பி. முத்துசெல்வன் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் ஜவஹர் சாமுவேல், பேராசிரியர்கள் வின்பிரட் ஜெபராஜ், எவாஞ்சலின் மரிபா, ராஜேஷ் அனந்தசெல்வன், பெஸ்டி ரத்னபாய் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இக்கருத்தரங்கில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூடங்குளம் மாதிரி விளக்கக் கண்காட்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com