அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள்: தொழிற்சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 100 சதவீதம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்க வேண்டும் என திருநெல்வேலியில் நடைபெற்ற

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 100 சதவீதம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்க வேண்டும் என திருநெல்வேலியில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் மண்டல மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்ட தொமுச, அரசுப் பணியாளர் சங்கம், சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, ஏடிடியூசி, ஏஐசிசியூ மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்த ஆயத்த மண்டல மாநாடு திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வண்ணார்பேட்டையில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு, தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக் கடை தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்டப் பொறுப்பாளர் சு. கண்ணன் தலைமை வகித்தார். கூட்டுறவு சம்மேளனத்தின் மாநில இணைச் செயலர் எஸ். பிரேம் ஆனந்த், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எம். தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டை, மத்திய மாவட்ட திமுக செயலர் மு. அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார்.
இதில், தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக் கடை தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலர் இரா. பொன்னுராம், தொமுச அமைப்புச் செயலர் அ. தர்மன், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலர் ஏ. கிருஷ்ணமூர்த்தி, அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜி. ராஜேந்திரன், சிஐடியூ மாவட்டச் பொதுச்செயலர் ஆர். மோகன் உள்பட பலர் பேசினர்.  ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்.எல்.ஏ. வாழ்த்திப் பேசினார். 
தீர்மானங்கள்: ரேஷன் கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம், கூட்டுறவு ஊழியர்களை ஒரே துறையின்கீழ் கொண்டு வந்து, அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கும் பொருள்களை எடை குறைவு இல்லாமல் வழங்க வேண்டும். அனைத்து மின்னணு குடும்ப அட்டைகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் 100 சதவீதம் வழங்க வேண்டும். எடை குறைவதை தடுக்க அனைத்துப் பொருள்களையும் பாக்கெட் முறையில் விநியோகம் செய்ய வேண்டும். கூட்டுறவு அமைப்புகளுக்கு அரசு வழங்க வேண்டிய மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டுறவு பேரங்காடி செயலர் கே.எம்.எஸ். முகம்மது சைபுதீன் வரவேற்றார். கூட்டுறவு பேரங்காடி தலைவர் எஸ். ஐயப்பன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com