கேரளத்தில் விலை உயர்ந்தும் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யும் வாழை வியாபாரிகள்

திருநெல்வேலி மாவட்டம்,  களக்காடு வட்டாரத்தில் வாழைத்தார் சீசன் விறுவிறுப்படைந்த நிலையில், விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டம்,  களக்காடு வட்டாரத்தில் வாழைத்தார் சீசன் விறுவிறுப்படைந்த நிலையில், விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 
களக்காடு வட்டாரத்தில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படும்.  கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதாலும்,  சூறைக்காற்று உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் பலத்த நஷ்டம் ஏற்பட்டதாலும், போதிய விலை இல்லாததாலும்,  வாழை சாகுபடி படிப்படியாக குறைந்துவிட்டது. 
2017ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் வாழை பயிரிட்டவர்கள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இங்கு ஏத்தன் ரகம் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.  இப்பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு கேரளச் சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது.  ஆண்டுதோறும் மார்ச் மாதம் வாழைத்தார் சீசன் தொடங்கிவிடும்.  ஆனால் இந்தாண்டு  ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தான் வாழைத்தார் சீசன் தொடங்கியது. 
மாதத் தொடக்கத்தில்  வாழைத்தார் கிலோ ரூ.35 ஆக இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கிலோ ரூ.28 ஆக குறைந்துள்ளது. 
கேரளத்தில் ஏத்தன் ரக வாழைத்தார்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இங்குள்ள வியாபாரிகள் விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனர். வாழைத்தார் 1 கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்டு வந்தபோது  விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருந்தனர்.  இதனால் வியாபாரிகளுக்கு போதிய வாழைத்தார்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவியது.  இதையடுத்து, வியாபாரிகள் விலையைக் குறைத்து அறிவித்தனர்.  இதனால் பதற்றமடைந்த விவசாயிகள் மேலும் விலையை குறைத்துவிடக் கூடாது என்ற அச்சத்தில்  போதிய விளைச்சலை எட்டாத வாழைத்தார்களையும் வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். 
சூறைக்காற்று பாதிப்பு: 
2015, 2016 ஆம் ஆண்டில் பருவமழை பொய்த்துப் போனதால் வாழை சாகுபடி பரப்பளவு வெகுவாக சுருங்கிவிட்டது.  மேலும் சூறைக்காற்று உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் இப்பகுதி விவசாயிகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெகுவாகப் பாதிப்படைந்து வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. மழையுடன் சூறைக்காற்று வீசினால் வாழைகள் சேதமடைந்துவிடக் கூடும் என்ற அச்சமும் விவசாயிகளிடம் அதிகரித்துள்ளது.  இதன் காரணமாகவே விளைச்சல் இல்லாவிட்டாலும், கிடைத்த விலைக்கு விற்றுவிடக் கூடிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். 
ஒரு வாழைக்கு உற்பத்தி செலவு  ரூ.100 வரை ஆகி விடுகிறது. இதுபோக காற்றில் வாழை சாய்ந்துவிடாமல் இருக்க ரூ.70 வரை விலை கொடுத்து சவுக்கு கம்பு வாங்கும் நிலை உள்ளது.  இதுபோக பெரும்பாலான விவசாயிகள் தங்க நகையை வங்கிகளில் ஈடாக வைத்து கடன் பெற்றுத்தான் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டுள்ளனர்.  வாழைத்தார் விலை மேலும் குறைந்தால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. 
களக்காட்டில் அரசின் வாழைத்தார் கொள்முதல் நிலையமும், வாழைத்தார் குளிர்பதனக் கிட்டங்கியும் அமைக்கப்பட்டால் தான் விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களில் நீண்ட காலமாக முறையிட்டும் தீர்வு கிட்டவில்லை என்று ஆதங்கப்படுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி. பெரும்படையார். 
இதே நிலை தொடர்ந்தால் வாழை விவசாயம் படிப்படியாகக் குறைந்து விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறிவிடும் ஆபத்தும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com