நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி ஆலை: காங்கிரஸ் எம்எல்ஏ வலியுறுத்தல்

நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி ஆலை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹெச். வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.

நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி ஆலை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹெச். வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.
பாளையங்கோட்டையில் உள்ள நான்குனேரி பேரவைத் தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ. கூறியது: நான்குனேரி பேரவைத் தொகுதி களக்காட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் களக்காடு-காமராஜர் சிலை அருகில் நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ. 67 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.13) நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தேன்.
இந்நிலையில் சனிக்கிழமை களக்காட்டுக்கு வந்த மக்களவை உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன், இப்பாலம் கட்டும் பணிக்கு 2 வது முறையாக அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். ஏற்கெனவே அடிக்கல் நாட்டும் பணி  முடிவடைந்த பின்னர்,  மீண்டும் அடிக்கல் நாட்டுவது எந்த வகையில் நியாயம்? இது கண்டனத்துக்குரியது.
நான்குனேரி பொருளாதார மண்டலத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி ஆலை அமைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து மனு அளித்துள்ளேன்.
விவசாயிகள், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வடக்குப்பச்சையாற்றில் இருந்து 46 குளங்களை இணைக்கும் வகையில் இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது, காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.எம். சிவக்குமார், மாவட்ட வர்த்தக அணித் தலைவர் இராஜகோபால், உன்னாகுளம் சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி தருவை காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com