நெல்லையில் கழிவுகளின் கேந்திரமாகும் நயினார்குளம்!

திருநெல்வேலியில் கழிவுகளின் கேந்திரமாக நயினார்குளம் மாறி வருவதால் வேளாண்மையும், நீர்வாழ் பறவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

திருநெல்வேலியில் கழிவுகளின் கேந்திரமாக நயினார்குளம் மாறி வருவதால் வேளாண்மையும், நீர்வாழ் பறவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினார்குளம்  55 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.  சுத்தமல்லி அருகேயிருந்து பிரிந்து வரும் நெல்லைக் கால்வாய் மூலம் தாமிரவருணி தண்ணீரைப் பெறும் இக்குளம் ஆண்டில்  குறைந்தது 8 மாதங்களுக்கு தண்ணீர் வற்றாமல் காணப்படும். இந்தக் குளத்தின் மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நெல்லையப்பர் கோயிலின் வெளித்தெப்பம், உள்தெப்பம் ஆகியவற்றுக்கும் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டு வந்தது.  தற்போது, முறையான பராமரிப்பின்மையால் வெளித்தெப்பத்துக்கு மட்டுமே இக்குளத்தில் இருந்து தண்ணீர் செல்கிறது. சுகாதாரமற்ற நிலையிலும் காணப்படுகிறது. இந்தக் குளத்தில் படகு குழாம் அமைக்க வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. 
கழிவுகளால் ஆபத்து: இதுகுறித்து திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில்,  கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்கள் பலரும் இக் குளத்தில் குளித்து வந்தார்கள். ஆனால், இப்போது இந்தக் குளத்துக்கு தண்ணீர் வரும் பிரதான கால்வாயில் புதைச் சாக்கடை கழிவுகள் கலப்பதால் சில நேரங்களில் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.  குளத்தைச் சுற்றிலும்  அமைக்கப்பட்டிருந்த நடைபாதை முறையான பராமரிப்பின்றி பயனற்று கிடக்கிறது.  இக்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமன்றி காய்கனி கழிவுகள், உணவு விடுதிகளின் கழிவுகள் மற்றும்  கழிப்பறை கழிவுகளை (செப்டிக் டேங்)  வாகனங்களில் கொண்டுவந்து கொட்டும் அவலம் தொடர்கிறது.  இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்  கழிவுகளின் கேந்திரமாக மாறிவருகிறது. அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பால் நீர்வாழ் பறவைகள் பாதிப்படைகின்றன  என்றார்.
சீரமைப்பு பணி தேவை: இதுகுறித்து பாட்டப்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,  திருநெல்வேலி நயினார்குளத்தில் படகு குழாம் அமைத்தால் அரசுக்கு அதிக வருவாய் கிடைப்பதோடு மக்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும். இம் மாதம் 27 ஆம் தேதி நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் சூழலில் நயினார்குளத்தில் படர்ந்துள்ள அமலைச் செடிகளை அப்புறப்படுத்தவும், கழிவுகள் குளத்திற்குள் கொட்டப்படாமல் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com