மூலப்பொருள்கள் விலையேற்றத்தால் இனிக்காத நாடோடி வாழ்க்கை! திருவிழா வியாபாரிகள் கவலை

குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் காக்க நாடோடி வாழ்க்கை வாழ்ந்து இனிப்பு பொருள்களை தயாரித்து மக்களுக்கு விநியோகித்தாலும்,

குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் காக்க நாடோடி வாழ்க்கை வாழ்ந்து இனிப்பு பொருள்களை தயாரித்து மக்களுக்கு விநியோகித்தாலும், மூலப்பொருள்களின் கடும் விலையேற்றத்தால் தங்களது வாழ்க்கை இனிக்காத சூழலிலேயே உள்ளதாக திருவிழா வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
தென்தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள்,  தர்கா விழாக்களிலும் திருவிழா இனிப்பு கடைகள் மிகவும் பிரசித்தம். காரச்சேவு, இனிப்புச்சேவு, பூந்தி, லட்டு ஆகியவை மட்டுமன்றி "ஏணி மிட்டாய்' என அழைக்கப்படும் சீனி, கருப்புக்கட்டி மிட்டாய்கள் பாரம்பரிய பலகாரமாக இன்றளவும் திருவிழா கடைகளில் விற்பனையில் முன்னணியில் உள்ளன.
திருவிழா கடைகளை நம்பி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினரின் கல்வி, உணவு, ஆரோக்கியத்திற்காக நாடோடியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து உழைத்து வருகிறார்கள். ஆனால், போதிய லாபமும், வருவாயும் கிடைக்காததால் இனிக்காத சூழலிலேயே இனிப்பு பலகாரம் செய்யும் பணியைச் செய்து வருவதாக கவலை தெரிவிக்கிறார்கள்.
பெட்டிகளின் ஆதிக்கம் இல்லை: இதுகுறித்து பலகார மாஸ்டர் ஒருவர் கூறியது: பாபநாசம், சீவலப்பேரி, குற்றாலம் பகுதிகளில் நடைபெறும் சித்திரைத் திருவிழா, புளியம்பட்டி, வடக்கன்குளம், உவரி, காமநாயக்கன்பட்டி, பனிமயமாதா தேவாலய திருவிழா, பொட்டல்புதூர், ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா, ஏரல் மற்றும் காணிக்குடியிருப்பு ஆடி அமாவாசை விழா உள்பட தென்மாவட்டத்தில் முக்கிய திருவிழா நேரங்களில் இனிப்பு கடை அமைத்து வருகிறோம்.
திருவிழா கடைகளில் காரச்சேவு, இனிப்புச்சேவு, சர்க்கரை மற்றும் கருப்புக்கட்டி மிட்டாய்களே அதிகம் விற்பனையாகும். அரிசி மாவு, உளுந்து மாவு, சர்க்கரை அல்லது கருப்புக்கட்டி, ஏலக்காய், சுக்கு உள்ளிட்டவை சேர்த்து ஏணி மிட்டாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை பனையோலை பெட்டிகளில் விற்பனை செய்வது வழக்கம்.
திசையன்விளை, அணைக்கரை, உடன்குடி, மிட்டார்தார்குளம், வாழைத்தோட்டம் கிராமங்களில் பனையோலை மிட்டாய் பெட்டி உற்பத்தியில் ஏராளமானோர் ஈடுபட்டனர். இப்போது உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. ஒரு பெட்டி 25 முதல் 50 பைசாவுக்கு கிடைத்து வந்த நிலையில், இப்போது 4 பெட்டிகள் ரூ.15-க்கு விற்கப்படுவதால் அவற்றை வாங்கி விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
மேலும், ஆறிய மிட்டாய்களை விட சுடச்சுட கடைகளில் ஏணி மிட்டாய்களை வாங்கி சுவைக்கவே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.  திருவிழா மிட்டாய்களுக்கு தனி மவுசு உள்ளதை மறுப்பதற்கில்லை என்றார் அவர்.
இனிக்காத வியாபாரம்: இதுகுறித்து திருவிழா கடை உரிமையாளரான எஸ்.முத்துக்கிருஷ்ணன் கூறியது: திருவிழா கடைகள் நடத்துவதில் பல்வேறு சவால்கள் உள்ளன. ஓரிடத்தில் கடை வைப்பதற்கு 5 நாள்கள் முன்னதாக மூலப்பொருள்களை கொண்டு சேர்க்க வேண்டும். அங்கு பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு பெரும் பிரச்னைகள் உள்ளன. ஒரு கடையில் குறைந்தபட்சம் 1,500 முதல் 2,000 கிலோ வரை மட்டுமே இனிப்பு-காரம் விற்பனையாகும்.
மழை, பிரச்னை போன்றவை விழாக்களில் குறுக்கிட்டால் விற்பனை பாதியாக சரிந்துவிடும். இதுதவிர கடலைமாவு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலையேற்றமும், தொழிலாளர் பற்றாக்குறையும் இத் தொழிலில் லாபம் சம்பாதிக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளன.
முன்பெல்லாம் திருவிழா கடைகளுக்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை வசூலித்தனர். இப்போது திருவிழா கடை வாடகை உரிமையும் ஒப்பந்தம் விடப்படுவதால் பிரசித்தி பெற்ற கோயில் விழாக்களில் கடை வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.2,000 வரை கொடுக்க வேண்டியுள்ளது.
மாநகர பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்குக் கூட அடையாள அட்டைகள் வழங்கப்படுவதால் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. அதுபோல எங்களைப் போன்ற திருவிழா வியாபாரிகளை இந்து சமய அறநிலையத் துறையினரும், வருவாய்த் துறையினரும் கணக்கிட்டு அடையாள அட்டைகளை வழங்கலாம்.
இதன்மூலம் இந்துசமய அறநிலையத் துறை சார்ந்த கோயில்களில் கடைகள் அமைக்க பல ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் நிலையை மாற்றி சலுகைகள் வழங்கலாம். வியாபாரிகளுக்காக தங்குமிட வசதி, கழிப்பறை வசதிகளை தனியாக ஏற்படுத்திக் கொடுத்தால் சுகாதாரம் மேம்படுத்தப்படும். இவற்றை அரசு அலுவலர்கள் செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com