மணிமூர்த்தீஸ்வரம் கோயில் நில விவகாரம்: ஆட்சியர் விளக்கம்
By DIN | Published on : 17th April 2018 09:37 AM | அ+அ அ- |
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் மூர்த்தி விநாயகர் கோயில் நிலம் தொடர்பான உண்மையில்லாத தகவல்களை நம்ப வேண்டாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி வட்டம், மணிமூர்த்தீஸ்வரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மூர்த்தி விநாயகர் கோயில் நிலத்தில் கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் பொய்யானது. பிரஸ்தாப நிலம், நகர அளவை கணக்கின்படி திருநெல்வேலி வட்டம், மணிமூர்த்தீஸ்வரம் கிராமம், நகர அளவை வார்டு இ பிளாக் 3, நகர புல எண் 14 இல் 7750 சதுரமீட்டர் சர்க்கார் புறம்போக்கு என உள்ளது.
இதன் ஒரு பகுதியில் மூர்த்தி விநாயகர் கோயில் அமையப்பெற்றுள்ளது. புல எண்ணின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகர புல எண் 13/12 பரப்பு 325 சதுர மீட்டர் நிலம் ஏசுவடியான் மகன் ஜெயராஜ் என்ற பெயரில் பட்டா நிலமாக உள்ளது.
இந்த நிலத்தில் அதன் உரிமையாளர்களால் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. எனவே, கோயில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கல்லறை தோட்டமோ, சுற்றுச்சுவரோ அமைக்கப்படவில்லை. இதுகுறித்து வெளியான தகவல்கள் உண்மையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.