1,016 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68.27 லட்சம் நல உதவிகள் அளிப்பு

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 1,016 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 1,016 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.  1,016 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68.27 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசியது:
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதை பெருமையாக கருதி பல்வேறு திட்டங்களை தீட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அவரது வழியில் இப்போதைய அரசும் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.  2013-14 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதில் சிறந்த மாநிலம் என்ற தேசிய விருதை தமிழகம் பெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஆரம்ப கால பயிற்சி, திருமண உதவி திட்டம், அரசு அலுவலகங்களில் சாய்தள பாதை,  மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்குதல்,  சிறப்பு பள்ளிகள், சிறப்பு கல்விக்கான உதவி, வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தடையற்ற சமூக சூழலை உருவாக்கி சமுதாயத்தில் சம வாய்ப்புகளை பெற்று ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது என்றார்.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியது: ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 மாதங்களுக்கு ஒரு முறை சிறப்பு மனுநீதி நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. செயற்கை அவயங்கள் வழங்கிட மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் பேருந்து பயன்பாடு குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்தினாளிகள் மற்றும் முதியோர்களை பேருந்து நிறுத்தத்திலிருந்து அழைத்துவர பேட்டரி கார் வசதி செய்யப்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றிய 9 பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 316 பேருக்கு ரூ.38.93 லட்சம் மதிப்பிலும்,  ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் மூலம் 700 பேருக்கு ரூ.68.27 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இவ் விழாவில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 2016-17 ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 10 கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர்மணி, கலை நன்மணி மற்றும் கலை முதுமணி ஆகிய விருதுகளை அமைச்சர் வழங்கினார். 
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன்,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்டு, குருமூர்த்தி, கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் சுந்தர், முடநீக்கியல் தொழில்நுட்பாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com