கேரளத்துக்கு முதற்கட்ட நிவாரணப் பொருள்கள்

மழையால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து முதற்கட்ட நிவாரணப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சனிக்கிழமை அனுப்பி வைத்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து முதற்கட்ட நிவாரணப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சனிக்கிழமை அனுப்பி வைத்தார்.
கேரளத்தில் பெய்த கனமழைக்கு ஏராளமானோர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால், உடமைகளை இழந்து அங்குள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். இதையடுத்து அவர்களுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிருந்து நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 30 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட், 3 ஆயிரம் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 500 ரஸ்க் பாக்கெட், 500 போர்வை ஆகியவற்றை வேன் மூலம் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அனுப்பி வைத்தார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருள்களை சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வந்து, பின்னர் கேரளத்தில் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போதைய நிலையில் கேரள மக்களுக்கு அரிசி, பிஸ்கட், மைதா, வேட்டி, சேலை, நைட்டி, லுங்கி, சட்டை, உள்ளாடை, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதர துணி வகைகள், போர்வை, பாய் போன்றவை அதிக அளவில் தேவைப்படுகிறது. மேலும் மாத்திரை, மருந்துகள் அதிக அளவில் தேவைப்படுகிறது. 
எனவே, மாவட்டத்தில் வணிகர் சங்கம், அரிசி ஆலைகள் சங்கம், ரோட்டரி கிளப், குவாரி சங்கம், மருத்துவ சங்கம், அரிமா சங்கம் போன்றவை இணைந்து செயல்படவுள்ளன. இப்போது பிஸ்கட், குடிநீர், போர்வை, ரஸ்க் போன்றவை கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 
மேலும் தேவையான இடங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. நிவாரணப் பொருள்களை கொண்டு செல்வதற்கும், சேமிப்பு கிடங்கிற்கும் 10 அலுவலர்கள் சுழற்சி முறையில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர். உபயோகப்படுத்திய துணிகளை அனுப்ப வேண்டாம் என்றார். 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
எஸ்டிபிஐ சார்பில்... எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி, நான்குனேரி , ராதாபுரம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிகள் சார்பில் அறுபதுக்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நிவாரண நிதியும், அரிசி, பருப்பு வகைகள், பிரட், சோப், போர்வை, நைட்டி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களும் சேகரிக்கப்பட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கபட்டது. அடுத்த கட்டமாக அணைத்து கிளைகள் சார்பில் வீதிவீதியாக நிவாரணப் பொருள்கள் திரட்டப்பட உள்ளன. 
பின்னர் அவை கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முகாம்களிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கட்சியின் செயல் வீரர்கள் மூலம் விநியோகம் செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com