பாளை. கல்லூரியின் பேரிடர் குழுவினர் கேரள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேரிடர் உதவிக் குழுவின் சார்பில் கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சேகரிப்படவுள்ளது.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேரிடர் உதவிக் குழுவின் சார்பில் கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சேகரிப்படவுள்ளது. இதில் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை வழங்கலாம். 
இதுதொடர்பாக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் மு.முகமது சாதிக், பேரிடர் உதவிக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் துறை தலைவருமான ச.மகாதேவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: 
கேரள மக்களுக்கு உதவுவதற்காக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேரிடர் உதவிக் குழுவின் பொருள்கள் சேகரிப்பு நிலையம் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான கட்செவி அஞ்சல் குழுவும் செயல்படத் தொடங்கியுள்ளது. 
கேரள அரசிடமிருந்து பெறப்பட்ட அவர்களுக்கு தேவையான உதவிப் பொருள்கள் பட்டியலின் அடிப்படையில் கல்லூரி பேரிடர் உதவிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாக ஆலோசகர் பி.ஏ.அப்துல் கரீம், நிதிக்காப்பாளர் ஆ.ஹாமில், ஆங்கிலத் துறைத் தலைவர் எஸ்.முகமது ஹனிப் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். 
உடனடியாக வகுப்பு வாரியாக நிவாரணப் பொருள்கள் வேண்டும் என்ற செய்தி மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
22-ஆம் தேதிக்குள் ரூ.10 லட்சம் மதிப்பிலான உடைகள், பிஸ்கட் பெட்டிகள், போர்வைகள், அவசியமான மருந்துப் பொருள்கள் ஆகியவற்றை சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியோடு திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றமும் இணைந்து பொருள்களைச் சேகரிக்கிறது.
கேரள மக்களுக்கு உடனடி தேவையாக உள்ள பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாய் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருள்சேகரிப்பு நிலையத்தில் பொதுமக்கள், அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள், தனியார் துறைகளில் பணிபுரிவோர், ரோட்டரி, லயன்ஸ் கிளப் போன்ற தொண்டு நிறுவனங்கள் தாங்கள் தர விரும்பும் பொருள்களைத் தரலாம். 
கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர் பேரவை இணைந்து எடுத்துள்ள இந்த முயற்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம். 
மாணவர் பேரவை, இளைஞர் நலத்துறை, தேசிய மாணவர் படை, சதக்கத் கிராம மேம்பாட்டுத் திட்டம், தேசியத் தொண்டு இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் கழகம், உடற்கல்வித்துறை ஆகிய அமைப்புகளின் மாணவ, மாணவியர், பேராசிரியர்களுடன் இணைந்து இப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
பொருள்களைத் தரவிரும்புவோர் கல்லூரி முதல்வர் மு.முகமது சாதிக் (9943923586), தமிழ்த் துறை தலைவர் ச.மகாதேவன் (9952140275), பேராசிரியர் எஸ்.முகமது ஹனிப் (9488917318) ஆகியோரை கட்செவி அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பொருள்களை வழங்கலாம்.
பிஸ்கட் பாக்கெட்டுகள், பால் பவுடர்கள், தண்ணீர்ப் பாட்டில்கள், நைட்டிகள், கைலிகள், போர்வைகள், பாய், தலையணைகள், நாப்கின்கள், அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்கள், கொசுவர்த்திச் சுருள்கள், மெழுகுவர்த்திகள், பற்பசை, பிரஷ், சோப்பு, டெட்டால் பாட்டில்கள், உணவு சமைக்கும் பாத்திரங்கள், குடைகள், ரெயின்கோட்டுகள் ஆகியவற்றை வழங்கலாம் என கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com