இக்கட்டான சூழ்நிலையில் சில்லறை வணிகம்: த.வெள்ளையன்

ஆன்லைன் வணிகம், நூறு சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்றவற்றால் சில்லறை வணிகம் இக்கட்டான சூழ்நிலையில்

ஆன்லைன் வணிகம், நூறு சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்றவற்றால் சில்லறை வணிகம் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
தென்காசி வியாபாரிகள் நலச் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், தென்காசி அருகே மேலகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் பரமசிவன், துணைத் தலைவர் ஜெபராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். செயலர் என்.மாரியப்பன், துணைச் செயலர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முகைதீன் ஆண்டறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், மாவட்டத் தலைவர் ஆர்.காளிதாசன், ராமகிருஷ்ணன், மீரான், இராமசந்திரன், ஜோயல், சுல்தான், செயற்குழு உறுப்பினர்கள் முத்துகுமாரசாமி, கோவிந்தராஜ், செந்தில்வேல், கலில் ரகுமான், இளங்கோ, நடராஜன், பால்ராஜ், அழகுராஜ், சாகுல் ஹமீது, முகம்மது ஷேக் செய்யதுஅலி, கவிதா எஸ்.மாரியப்பன் ஆகியோர் பேசினர். இதில் த.வெள்ளையன் சிறப்புரையாற்றினார்.
கொல்லத்திலிருந்து செங்கோட்டை, திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை, மதுரை வழியாக ஈரோட்டுக்கு ரயில் இயக்க வேண்டும். தென்காசியில் சுற்றுச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு இரவு 10 மணிக்கு இருமார்க்கத்திலும் ரயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கௌரவத் தலைவர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் த.வெள்ளையன் கூறியதாவது: ஆன்லைன் வணிகம், நூறு சதவீத  அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்றவற்றால் சில்லறை வணிகம் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. சில்லறை வணிகத்தை காப்பாற்ற மத்திய, மாநிலஅரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக்கை ஒழித்துக் கட்டுவது  என்பது எதிர்விளைவுகளை உருவாக்கும். பிளாஸ்டிக்கை ஒழிக்காமல் ஒழுங்குபடுத்த வேண்டும்.
கேரளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னையிலிருந்து காலை 7 மணிக்கு வாகனங்களுடன் புறப்பட்டு வழியில் நிவாரணப் பொருள்களை சேகரித்து கேரள மக்களுக்கு வழங்கவுள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com