கோயில் சொத்துகள், சிலைகளை ஆவணப்படுத்த வேண்டும்: ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு வலியுறுத்தல்

கோயில் சொத்துகள், சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவின் மாநிலத் தலைவர் டாக்டர் தெய்வபிரகாஷ் வலியுறுத்தினார்.

கோயில் சொத்துகள், சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவின் மாநிலத் தலைவர் டாக்டர் தெய்வபிரகாஷ் வலியுறுத்தினார்.
ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவின் மாநில, மாவட்ட, நிர்வாகிகள் கூட்டம் மற்றும் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அமைப்பின் மாநிலத் தலைவர் டாக்டர் தெய்வபிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியது: ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு சார்பில் கடந்த 50 ஆண்டுகளாக கோயில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தாமிரவருணி மகா புஷ்கரம் சிறப்பாக நடைபெறும் வகையில் இக்குழுவினர் பணியில் ஈடுபடுவார்கள்.
புஷ்கரம் விழாவை தேசிய நிகழ்ச்சியாக அறிவித்து அரசு விழாவாக நடத்த வேண்டும். பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை படித்துறைகளைச் சீரமைக்க வேண்டும். புஷ்கரம் விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, போக்குவரத்து வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். புஷ்கரம் நடைபெறும் நாள்களில் தாமிரவருணி நதிக்கரையிலுள்ள கோயில்களில் தீர்த்தவாரி நடத்த வேண்டும்.
ஆலயங்கள் ஆன்மிகத் தலமாக இருக்க வேண்டும்; வணிகத் தளமாக இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயிலில் இருந்து 150 மீட்டர் தொலைவுக்கு மதுக்கடை, புகையிலை பொருள்கள், அசைவ உணவகங்கள் போன்றவை இருக்கக் கூடாது என்பதற்கு ஏற்ப திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலை சுற்றி இருக்கும் வணிகத் தலங்களை அப்புறப்படுத்த வேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும்.
18 ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல்லையப்பர் கோயிலில் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, மேற்கு, தெற்கு, வடக்கு வாசல்கள் திறந்து வைக்கப்பட்டு வந்தது. ஆனால், கோயிலில் தற்போது அம்பாள் சன்னதி, சுவாமி சன்னதி வாசல் மட்டுமே திறக்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு வாசல்களை திறந்து வைக்க வேண்டும். கோயிலை சுற்றியுள்ள சாலை உயர்ந்த காரணத்தால் கோயிலுக்குள் தண்ணீர் செல்லும் நிலை உருவாகியுள்ளது. அதனை சீர்படுத்த வேண்டும்.
தமிழகத்திலுள்ள கோயில் தெப்பக்குளங்களைத் தூர்வார வேண்டும். தெப்பக்குளங்களைச் சுற்றி காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாளையங்கோட்டையில் திரிபுராந்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றியிருக்கும் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற வேண்டும்.
கோயில்களின் சிறப்புகள், சொத்துகள் போன்றவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து கோயில்களிலும் ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு அமைக்கப்படும்.
கோயில்களில் காலியாக இருக்கும் பூசாரி, ஊழியர்கள், நிர்வாக அதிகாரிகள் போன்ற பணி யிடங்களுக்கு ஆகம விதிகளின்படி மத நம்பிக்கை, ஆன்மிக ஈடுபாடுள்ளவர்களை நியமனம் செய்ய வேண்டும். கோயில் சிலைகள் திருட்டு வழக்குகளில் உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
சிலைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்குகளில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்திலுள்ள கோயில்களின் சொத்துகள், சிலைகள் குறித்து கணக்கெடுப்பு செய்து ஆவணப்படுத்துவதோடு, அவற்றை பாதுகாக்க வேண்டும். கோயில்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப் பணிகளுக்கு அரசு தரப்பில் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது, அமைப்பின் மாநில பொதுச்செயலர் ஆறுமுகநயினார், மாநில துணைத் தலைவர் சுந்தரவடிவு, மாநிலச் செயலர்கள் செந்தில்நாதன், சரவணன், மாநில அமைப்பாளர் சுடலைமணி, திருநெல்வேலி மாவட்டத் தலைவர் குணத்துரை, மாவட்டச் செயலர் சண்முக சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com