காதலர் தினத்தை ஆதரித்தும், எதிர்த்தும் போராட்டங்கள்

காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் திருநெல்வேலியில் புதன்கிழமை நூதன போராட்டங்கள் நடைபெற்றன.

காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் திருநெல்வேலியில் புதன்கிழமை நூதன போராட்டங்கள் நடைபெற்றன.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் வை. ராஜேஷ் தலைமை வகித்தார். காதலுக்கு ஆதரவாக புறாக்களைப் பறக்கவிட்டு, கேக் வெட்டி கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், தமிழர்கள் சங்க காலத்திலிருந்தே வீரத்தையும், காதலையும் கொண்டாடி வருகின்றனர். காதல் என்கிற உணர்வைச் சொல்லாத இலக்கியங்களே இல்லை. இப்போது காதல் என்றாலே மேற்கத்திய கலாசாரம், சமுதாய சீரழிவு என்று கூறப்படுகிறது. இது தவறானது என்றனர்.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: இந்து மக்கள் கட்சி சார்பில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்டத் தலைவர் உடையார் தலைமையில் கட்சியினர் மலர் மாலை,  தாலிக் கயிறுகளுடன் கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையம் முன்பு திரண்டனர்.
மகளிரணிச் செயலர் காந்திமதி, மேற்கு மாவட்டத் தலைவர் சுடலைமணி, மாநகரத் தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
அப்போது காதலர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று கூறியதால் அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸார் உடையார் உள்பட 3 பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதேபோல இந்து முன்னணி சார்பில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காதலர் தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்தெறியும் போராட்டம் திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com