நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 5 பேர் சிக்கினர்

திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு தப்பிய 5 பேர் போலீஸில் சிக்கினர்.

திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு தப்பிய 5 பேர் போலீஸில் சிக்கினர்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே தெற்கு புறவழிச்சாலையில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் 32 பேர் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இரு அறைகளில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக ஒருவர் கூறியதால், அறையைத் திறந்தபோது வார்டன் சண்முகராஜ், காவலர் அருணாசலம் ஆகியோரை இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு 12 பேர் அங்கிருந்து தப்பினர். தப்பியவர்களில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பால்துரை, திருப்பத்தூரைச் சேர்ந்த பாலாஜி, தட்டப்பாறையைச் சேர்ந்த மாரிக்கண்ணன், விருதுநகர் மாவட்டம் சேத்தூரைச் சேர்ந்த சிவகணேசன் ஆகியோர் திருநெல்வேலியில் போலீஸாரிடம் சிக்கினர். கோவில்பட்டியைச் சேர்ந்த சூர்யா அங்குள்ள கதிரேசன்மலை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று அவரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் தனக்குத்தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாராம். இதில் காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸார் சேர்த்தனர். இவர், கோவில்பட்டியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியவர்களில் 5 பேர் சிக்கியுள்ளனர்.  தூத்துக்குடி ராஜ்குமார், செல்வம், அழகுராமர், சூர்யா,  இசக்கிராஜா,   பண்டாரபுரம் கிறிஸ்டோபர், ஏரல் சத்தியம் முகேஷ் ஆகியோர் தேடப்பட்டு வருகிறார்கள். பேருந்து மூலம் வெளிமாவட்டங்களுக்குச் சென்றிருக்கலாம் என்பதால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com