பொங்கல் பண்டிகை: நெல்லை சந்தைகளில் காய்கனிகள் விற்பனை அதிகரிப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை காய்கனி சந்தைகளில் வெள்ளிக்கிழமை விற்பனை 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை காய்கனி சந்தைகளில் வெள்ளிக்கிழமை விற்பனை பல மடங்கு அதிகரித்தது. பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக காய்கனி வாங்க சந்தைகளில் மக்கள் குவிந்தனர். கார், வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகை நாளில் புத்தரிசியில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். இந்த நாளில் அசைவம் தவிர்த்து காய்கனி சமையல் அனைத்து வீடுகளிலும் பிரதானமாக இருக்கும். சந்தையில் கிடைக்கும் அனைத்து காய்கனிகளையும் ஒன்றாக சேர்த்து பொங்கல் கூட்டு தயாரித்து, பச்சரிசி சாதத்துடன் சேர்த்து உண்டு மகிழும் பழக்கம் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் சீர்: திருமணமான பெண்களுக்கு தங்களது தாய் வீட்டில் இருந்து பொங்கல் சீர் கொடுக்கப்படுகிறது. தலைப் பொங்கல் என்றால் விளக்கு,  பித்தளை பொங்கல் பானை,  பச்சரிசி, வெல்லம்,  மஞ்சள்குலை, கரும்பு கட்டுகள், வாழைக்குலை, காய்கனிகள் உள்பட ஏராளமான பொருள்கள் வழங்கப்படுகின்றன. சிலருக்கு திருமணமாகி 25 ஆண்டுகளைக் கடந்த பின்பும் தாய்வீட்டில் இருந்து சகோதரர்கள் மூலம் பொங்கல் சீர் வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தது போல் இல்லாமல் இருந்தாலும், குறைந்தபட்சம் மஞ்சள்குலை, கரும்புகள், காய்கனிகளை தாய் வீட்டு சீதனமாக வழங்கி பொங்கலைச் சிறப்பிக்கின்றனர். இதனால், பொங்கலுக்கு முந்தைய 4 நாள்கள் பொங்கல் பொருள்கள் விற்பனை விறுவிறுப்பு அடையும்.
விலை உயர்வு: பொங்கல் பண்டிகையின் பிரதான பொருள்களான கரும்பும், மஞ்சளும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் குவிக்கப்பட்டன. ஆனால், இவற்றின் விலை வெள்ளிக்கிழமை காலையில் திடீரென உயர்ந்தது. ரூ. 5 முதல் ரூ. 20 வரை விற்கப்பட்டு வந்த மஞ்சள் குலை ரூ.15 முதல் ரூ.40 வரை உயர்ந்தது. ரூ. 3-க்கு விற்கப்பட்ட ஒரு பனங்கிழங்கு ரூ.5 ஆக விலை உயர்ந்தது. ரூ.250 முதல் ரூ.350 வரை விற்கப்பட்டு வந்த ஒரு கட்டு கரும்பு (10 எண்ணம்) ரூ. 300-இல் இருந்து ரூ.500 வரை விற்பனையானது. இந்த திடீர் விலையேற்றத்தால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆனால், கரும்புகள் மாலையில் அதிகளவில் வந்து குவிந்ததால் விலை சற்று குறைந்தது.
திருநெல்வேலி சந்தைகளில் காய்கனிகள் விலை விவரம் (ஒரு கிலோ):தக்காளி-ரூ.18, கத்தரி-ரூ.30, மிளகாய்-ரூ.22, முட்டைகோஸ்-ரூ.17, கேரட்-ரூ.56, சேனைக்கிழங்கு-ரூ.40, வல்லிக்கிழங்கு-ரூ.60, காய்ச்சல்கிழங்கு-ரூ.60, சிறுகிழங்கு-ரூ.60, சேம்பு-ரூ.60, வாழைக்காய்(ஒன்றுக்கு)-ரூ.10, சவ்சவ்-ரூ.13, பீட்ரூட்-ரூ.17, முள்ளங்கி-ரூ.18, தடியங்காய்-ரூ.10, பூசணி-ரூ.10, சின்னவெங்காயம்-ரூ.62, பல்லாரி-ரூ.48, உருளைக்கிழங்கு-ரூ. 22, சீனிஅவரைக்காய்-ரூ.30, அவரைக்காய்-ரூ.28, வெண்டைக்காய்-ரூ.25, மாங்காய்-ரூ.120, மல்லி இலை-ரூ.24, புதினா-ரூ.55, தேங்காய்-ரூ.50,  முருங்கைக்காய்-ரூ.140-க்கு, இஞ்சி- ரூ.75-க்கு விற்பனையாகின.
பூஜை பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. 5 வெற்றிலைகள் ரூ.5-க்கு விற்பனையானது. கதளிப்பழம் (10 எண்ணம்)-ரூ.30-க்கும், கற்பூரவள்ளி பழம் (10 எண்ணம்) ரூ.40-க்கும் விற்பனையாகின. 5 வாழை இலைகள் கொண்ட ஒரு பூட்டு ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது. வாழை இலை மற்றும் பழங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்தே அதிகளவில் வரும். இந்த ஆண்டில் அவற்றின் வரத்து சற்று குறைந்துள்ளது.
கிழங்குகள் வரத்து குறைவு: பொங்கல் விற்பனை குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது: பாளையங்கோட்டை சந்தைக்கு கிழங்குகள் வரத்து இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. பருவமழை போதிய அளவு பெய்யாததால் கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் இருந்து வரும் கிழங்குகள் பாதியாகக் குறைந்துவிட்டன. ஆனால், இங்கிலீஷ் காய்கனிகள் எனப்படும் உருளை, கேரட் விலை சற்று இறங்கியுள்ளதால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. ஆந்திரத்தில் இருந்து மிளகாயும், பெங்களூரில் இருந்து பூசணிக்காயும், புணேயில் இருந்து பல்லாரியும் அதிகளவில் வந்து குவிந்துவிட்டதால் அவற்றின் விலை எதிர்பார்த்ததைவிட குறைவாகவே இருந்தது.
முருங்கைக்காய்தான் இந்தப் பொங்கலில் கடும் உச்சத்தில் இருக்கிறது. உடன்குடி முருங்கைக்காய் சீசன் முடிந்துவிட்டதால், தாராபுரம் பகுதியில் இருந்து முருங்கைக்காய் வருகிறது. எனவே, ஒரு முருங்கைக்காய் ரூ.10 முதல் ரூ.16 வரை விற்பனையானது. மாங்காய் விலை பொங்கலுக்கு உயரும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த சில வாரங்களாக மாங்காய் பறிப்பதை தவிர்த்து பொங்கல் வாரத்தில் பல இடங்களிலும் பறித்ததால் அதன் விலை எதிர்பார்த்ததைவிட குறைந்துவிட்டது. 21 வகையான காய்கனிகளைச் சேர்த்து கதம்ப காய்கனி ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.120 வரை விற்பனை செய்கிறோம் என்றார் அவர்.
பேருந்துகள் இயங்கியதால் மகிழ்ச்சி: இதுகுறித்து திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த சண்முகம் கூறியது: திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இங்கு வந்து பொருள்களை வாங்கி செல்கிறார்கள். 
போக்குவரத்துக் கழக வேலைநிறுத்தம் காரணமாக வியாபாரம் மந்தம் அடையும் என்ற அச்சத்தில் இருந்தோம். ஆனால், வெள்ளிக்கிழமை வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டதால் வியாபாரம் நன்றாக இருந்தது. காப்பீடு கட்டண உயர்வு காரணமாக புதிதாக நான்குசக்கர வாடகை வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால், நிகழாண்டில் வாடகைக் கார் மற்றும் வேன்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில் கூட சிலர் பொங்கல் சீர்வரிசை காய்கனிகளை வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது என்றார். 

சந்தைகளில் அடிப்படை வசதிகள் இல்லை
பொங்கல் திருநாளையொட்டி பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள காய்கனி சந்தைகளுக்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அதற்கு ஏற்ப எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் குழந்தைகள், பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். 
இதேபோல இருசக்கர வாகனங்களை தொலைதூரத்தில் நிறுத்திவிட்டு வந்து பொருள்களை வாங்க வேண்டிய சூழல் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் காய்கனிகளை வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது. குறைந்தபட்சம் சிறப்பு குடிநீர்த் தொட்டிகள் கூட வைக்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்திவிட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். வருங்காலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும்,  பள்ளி-கல்லூரி மைதானங்கள் அல்லது குறிப்பிட்ட சாலையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com