366 பயனாளிகளுக்கு ரூ. 4.87 கோடி கடனுதவி
By DIN | Published on : 14th January 2018 01:54 AM | அ+அ அ- |
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வங்கிகள் மூலம் 366 பயனாளிகளுக்கு ரூ. 4.87 கோடி கடனுதவியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வங்கிக் குழு சார்பில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் மற்றும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அறிவியல் மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை தொடங்கி வைத்து, 366 பயனாளிகளுக்கு ரூ.4.87 கோடி கடனுதவியை வழங்கி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடவும், தொழில் தொடங்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முத்ரா திட்டம், நீட்ஸ் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
வங்கிக் கடன் உதவிகளை அனைவரும் தெரிந்து கொள்வதோடு, கடன் பெறுவதற்கான விதிமுறைகளையும், திட்டங்களையும் அறிந்து தொழில் தொடங்கிடும் வகையில் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. நல்ல லாபம் வரக்கூடிய, மற்றவர்களை பாதிக்காத வகையிலான தொழில்களை இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டும். முத்ரா திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் வரை கடன் பெற பிணையம் தேவையில்லை. இங்கு தொழில் கடன் பெறும் அனைவரும் சிறப்பாக தொழில் செய்து, ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நிதிசார் கல்வி ஆலோசகர்கள் பார்த்திபன், மகாலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் கஜேந்திரநாதன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சலீமா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.