தூய சவேரியார் கல்லூரியில் சர்வதேச விலங்கியல் மாநாடு

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சர்வதேச விலங்கியல் மாநாடு நடைபெற்றது.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சர்வதேச விலங்கியல் மாநாடு நடைபெற்றது.
விலங்கியல் துறையின் வைர விழாவையொட்டி 4 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாடு சனிக்கிழமை நிறைவடைந்தது. இதில், ஜெர்மனியைச் சேர்ந்த பேராசிரியர் ஹான்ஸ் இ.ஹம்மேல் கலந்து கொண்டு பூச்சிகளின் உடலில் இருந்து வெளிவரும் அங்கக வேதிப்பொருள்கள், அதன் வகைகள், பூச்சிக்கு பூச்சி அங்கக வேதிப்பொருள்கள் வேறுபடுவது ஏன் என்பது குறித்து விளக்கினார்.
தூய சவேரியார் கல்லூரியின் பூச்சியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் டங்ஸ்டன் பி.அம்புரோஸ் பங்கேற்று பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்து வருவதற்கான காரணங்களையும், பல்லுயிர்ப் பெருக்கத்தின் அவசியம் குறித்தும் பேசினார். டேராடூன் இந்திய காட்டுயிர் நிறுவனத்தைச் சேர்ந்த சூழலியல் விஞ்ஞானி ஜான்சன், இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய வனவிலங்கு சட்டங்கள் குறித்தும், இந்தியாவில் உள்ள காட்டுப் பயிர்களை பாதுகாக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பாக கங்கை டால்பின், கடல் பசு, வங்கப் புலி, கானமயில் ஆகியவற்றை பாதுகாக்க மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் இசையரசு, நவீனகால விலங்கியல் துறையின் கண்டுபிடிப்புகள், இயற்கையோடு விலங்குகள் கொண்டுள்ள தொடர்புகள், இயற்கை விவசாயம், ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு, பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு, பரிணாமம், நானோ தொழில்நுட்பம், விலங்குகளின் வகைப்பாடு, கடல் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, காட்டுயிர் பரவல், காட்டுயிர் கணக்கிடுதல் போன்ற தலைப்புகளில் ஆறு அமர்வுகளில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
இந்த மாநாட்டில் ஜெர்மனி, சூடான், மலேசியா, ஜாம்பியா, சவூதி அரேபியா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், விஞ்ஞானிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை தூய சவேரியார் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் கே.சகாயராஜ், துறைப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
முன்னாள் மாணவர் சந்திப்பு: மாநாட்டின் ஒரு பகுதியாக தூய சவேரியார் கல்லூரியின் விலங்கியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. கல்லூரிச் செயலர் அந்தோணிசாமி, முதல்வர் பிரிட்டோ ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com