நெல்லை மாவட்டத்தில் களைகட்டிய மாட்டுப் பொங்கல்!

திருநெல்வேலி மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா திங்கள்கிழமை பல இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா திங்கள்கிழமை பல இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழக மக்கள் ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கலை கோலாகலமாகக் கொண்டாடினர். இதையொட்டி, புத்தாடைகள் அணிந்து வீடுகளில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விவசாயப் பெருமக்களின் வாழ்வில் இணைந்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திங்கள்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. வீடுகளில் இருக்கும் பசுக்கள் மற்றும் காளை மாடுகளை குளிக்கவைத்து அலங்கரித்து, அவற்றுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.
கிராமங்களில் மாட்டுத் தொழுவங்கள், உழவுக் கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்தனர். மாடுகளுக்கு பொங்கல், பழங்களும் கொடுத்து கிராம மக்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள கோசாலையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலைச் சேர்ந்த மகாதேவ கோபாலகிருஷ்ண கோசாலையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் பட்டது.
பசுக்கள், காளை மாடுகளுக்கு பூஜைகள் செய்து பக்தர்கள் பொங்கலிட்டு பிரசாதம் அளித்து வழிபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதையொட்டி, மாடுகளின் கொம்பில் பண முடிப்பு கட்டி வீர விளையாட்டான மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்கள் பங்கேற்று மாடுகளை அடக்கி பணமுடிப்பை எடுத்துச் சென்றனர்.
பாளையங்கோட்டை அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி கோசாலையில், மும் மதத்தினர் கலந்துகொண்ட சர்வ சமய மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோமாதா வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவுக்கு இராமகிருஷ்ண தபோவன துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுத்தானந்த மகராஜ் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாகி ஸ்ரீமத் சுவாமி பக்தானந்தா மகராஜ், செயலர் யதீஸ்வரி சரவணபவ பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் கோ.பா. செந்தாமரைகண்ணன், லிட்டில் பிளவர் கல்விக் குழுமத் தலைவர் அ. மரியசூசை, பன்னாட்டு மதச்சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. சிதம்பரம், துணைத் தலைவர் எம்.கே.எம். முஹம்மதுகபீர், மறை மாவட்ட செயலக முதல்வர் அந்தோணிகுரூஸ் அடிகளார், கம்பன் இலக்கிய சங்கப் பொறுப்பாளர் நசீர், இலக்கிய வட்டத் தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிவப்பிரகாசர் நற்பணி மன்றச் செயலர் கவிஞர் கோ. கணபதிசுப்பிரமணியன் வரவேற்றார். கணேசன் நன்றிகூறினார்.
பாளையங்கோட்டையில் தெற்கு பிரதான வீதி, தச்சநல்லூர், திருநெல்வேலி நகரம் உள்பட பல்வேறு இடங்களில் மாட்டுப் பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com