நெல்லை மாவட்டத்தில் 8 அணைகள் வறண்டன: பாபநாசம் அணையும் மூடப்படுகிறது?

திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு வேகமாக சரிந்ததையடுத்து சேர்வலாறு, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட

திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு வேகமாக சரிந்ததையடுத்து சேர்வலாறு, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட 8 அணைகள் வறண்டன. மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 28 அடியாக குறைந்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி  மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, தாமிரவருணியில் இருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் விருதுநகர்,  கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த முறை நல்ல மழை பெய்ததால், பிசான சாகுபடி நடைபெற்று அறுவடைப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. வழக்கமாக அறுவடைப் பணிகள் தொடங்குகிறபோது, அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த முறை தொடர்ச்சியாக ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போது ஆட்சியர் முன்னிலையிலேயே பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், "மாவட்டம் முழுவதும் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகிறது; இனி தண்ணீர் தேவையில்லை என தெரிவித்த பிறகும், தாமிரவருணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீரை திறந்துவிட்டு வீணாக்குவது ஏன் என கேள்வியெழுப்பினர்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்காக இரண்டு நாள்கள் மட்டும் 1,000 கனஅடி தண்ணீர் திறந்திருப்பதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். 
ஆனால், அவர்களின் பதிலில் திருப்தியடையாத விவசாயிகள், தனியார் ஆலைகளுக்காக தண்ணீர் திறந்துவிடுவதாக சந்தேகிக்கிறோம் என குற்றம்சாட்டினர்.
அதன்பிறகும்கூட அணையிலிருந்து திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்படவில்லை. அதன் காரணமாக இப்போது முக்கிய அணைகள் வறண்டுவிட்டன. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 28 அடியாக சுருங்கிவிட்டது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 19.68 அடியாக குறைந்ததையடுத்து அணை மூடப்பட்டு, இங்குள்ள நீர்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.
மணிமுத்தாறு அணையில் இருந்து பிரதான கால்வாய்ப் பாசனத்துக்கு 450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்இருப்பு 83.52 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 18 கனஅடி நீர்வரத்து இருந்தது. மணிமுத்தாறு அணையில் 80 அடிக்கு கூடுதலாக நீர் இருந்தால் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். நீர்மட்டம் 83 அடியாக குறைந்ததையடுத்து பாசனத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 125 கனஅடியாக குறைக்கப்பட்டது.
நீர்இருப்பு: கடனாநதி அணை நீர்மட்டம்- 40.20 அடி, ராமநதி அணை நீர்மட்டம்-25 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம்-25 அடி, குண்டாறு அணை நீர்மட்டம்-20.63 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம்-10.75 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம்-5 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம்-11.97 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம்-2 அடியாக உள்ளது.
28 அடியாக குறைந்த பாபநாசம் அணை: அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வரும் சூழலில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து மட்டும் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் வழங்கப்படுகிறது. மணிமுத்தாறு அணையில் மட்டுமே அதிகபட்சமாக 2,443  மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 
பாபநாசம் அணையில் 276 மில்லியன் கனஅடி, கடனாநதி அணையில் 35.49 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.  சேர்வலாறு, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், வடக்குப் பச்சையாறு, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 8 அணைகளும் வறண்டன. 
பாபநாசம் அணையின் நீர் இருப்பு வேகமாக சரிந்ததையடுத்து நீர்மட்டம் 28 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 148.84 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 150 கனஅடி குடிநீர்த் தேவைக்காக திறந்துவிடப்படுகிறது. இதேநிலை, தொடர்ந்தால் அணை ஓரிரு நாளில் மூடப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் குற்றச்சாட்டு:  கடந்த காலங்களில் மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பிவிட்டால், பிசானம், கார் என இரு பருவமும்  விவசாயம் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்த முறை ஒக்கி புயல் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால், கார் சாகுபடியும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர்.
ஆனால், மூன்றரை மாதங்களுக்குள்ளாகவே பிரதான அணைகளின் நீர்மட்டம் மோசமான நிலையை எட்டியிருப்பதும், 8 அணைகள் வறண்டிருப்பதும் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் மட்டுமன்றி, கால்நடைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலையும், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
"மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. தாமிரவருணியில் இருந்து ஏராளமான தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதுவே அணைகள் வேகமாக வறண்டு போனதற்கு காரணம்' என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதேநிலை தொடருமானால் எஞ்சிய விவசாயமும் அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாக விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.
 

தவறான நீர்மேலாண்மையே காரணம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பி. வேலுமயில் கூறியது: வடகிழக்குப் பருவத்தில் அதிகமான மழை பெய்ததால் பெரும்பாலான அணைகள் நிரம்பின. பாசனத் தேவைபோக அணைகளில் போதிய நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில் 8 அணைகள் வறண்டுள்ளன. 
தாமிரவருணிப் பாசனத்தில் அறுவடை முடிந்த பிறகும் பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து தொடர்ந்து 1,000 கனஅடி வீதம் 3 வாரங்கள் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் நீர்இருப்பு வேகமாக குறைந்து, கோடைக் காலம் தொடங்கும் முன்பே நீர்மட்டம் 28 அடியாக குறைந்துள்ளது. மீன்பாசி குத்தகை வழங்கப்பட்ட குளங்களில் மீன்கள் வளர்ப்பதற்காக அடவிநயினார், கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து அறுவடை முடிந்த பின்னரும் தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால்தான் ராமநதி, அடவிநயினார் அணைகளின் நீர்இருப்பு குறைந்தது. அணைகளில் இருந்து நீரினை விநியோகம் செய்யும்போது அதிகாரிகள் நீர்ப்பாசன சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து தேவையான கால்வாய்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது.
தேர்தல் நடத்தாததால் நீர்ப்பாசன சங்கப் பிரதிநிதிகளின் பதவி காலியாக உள்ளது. இச்சூழலில் அதிகாரிகளின் தவறான நீர் மேலாண்மை காரணமாக நீர் இருப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து இன்றைய சூழலில் அணைகள் வறண்டுவிட்டன.
ஆகவே, நீர்ப்பாசன கமிட்டி தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும். மழைக் காலங்களில் கிடைக்கும்  நீரை பாசனத் தேவை போக சேமித்து வைக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com