பாழடைந்த நிலையில் காவல்கிணறு மலர் வணிக வளாகம்!

திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரே மலர் வணிக வளாகம் (காவல்கிணறு மலர் ஏல மையம்) செயல்படாமல் பாழடைந்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரே மலர் வணிக வளாகம் (காவல்கிணறு மலர் ஏல மையம்) செயல்படாமல் பாழடைந்து வருகிறது. இதனை பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரே மலர் வணிக வளாகம் இம் மாவட்டத்தின் தென்கோடியான காவல்கிணறு சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி 7 ஏக்கர் நிலப்பரப்பில்  அமைந்துள்ளது. இந்த மலர் ஏலமையம் தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே செயல்படாமல் மூடப்பட்டுவிட்டது. காவல்கிணறு, வடக்கன்குளம், ஆவரைகுளம், பிள்ளையார்குடியிருப்பு, புதியம்புத்தூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூச்செடிகள் பயிரிடப்படுகின்றன. இந்தப் பகுதி விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற மல்லி, பிச்சி, வாடாமல்லி, கோழிக்கொண்டை, சம்பங்கி, கேந்தி உள்ளிட்ட மலர்களை தோவாளை மலர்ச் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். 
ஆனால், அங்கு இடைத்தரகர்களின் தலையீடு காரணமாக விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை. இதையடுத்து, விவசாயிகளிடமிருந்து பூக்களை நேரடியாக வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்காக பூக்கள் உற்பத்தி செய்யும் கிராமங்களின் மையப்பகுதியான காவல்கிணறு சந்திப்பில் அரசு மலர் ஏல மையம் அமைக்கத் திட்டமிட்டது. இந்த மலர் வணிக வளாகம் அமைப்பதற்கு காவல்கிணறு ஊராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர், மேய்ச்சல் புறம்போக்கு நிலம் 4 ஏக்கர் என 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ரூ.1.63 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த மலர் ஏல மையத்தில் 10 கடைகள் வீதம் 4 தொகுப்புகளாக 40 மலர் ஏலக் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இது தவிர, மலர்களை சேமித்து வைப்பதற்காக குளிர்பதன அறை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இந்த மலர் ஏல மையம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடங்கப்பட்ட ஒருசில நாள்கள் மட்டுமே செயல்பட்ட இந்த மலர் வணிக வளாகம் பின்னர்  மூடப்பட்டது. தற்போது இந்த மலர் வணிக வளாகம் முட்புதர்கள் மண்டி, சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. கட்டடங்களும், கடைகளும், குளிர்பதன அறையும் பாழடைந்து வருகிறது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் வள்ளியூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிறிஸ்டோபர் கூறியது: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்ட காவல்கிணறு மலர் வணிக வளாகம் மூடப்பட்டு, தற்போது பாழடைந்து வருகிறது.  அங்குள்ள கட்டடங்கள் இடிந்து விழுவதற்கு முன்னால் அதை மறுசீரமைத்து பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என்றார்.
ஆவரைகுளம் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், பூ உற்பத்தி விவசாயியும், காவல்கிணறு மலர்வணிக வளாகத்தில் வியாபாரியாக இருந்தவருமான பாஸ்கர் கூறியது: காவல்கிணறு மலர் வணிக வளாகத்திற்கு பூ கொண்டு வரக்கூடிய விவசாயிகள் அதற்கு முன்னர் தோவாளை மார்க்கெட்டிற்கு பூ கொண்டு சென்றவர்கள். தோவாளை வியாபாரிகளிடம் முன்பணம் பெற்றவர்கள். எனவே, அவர்களால் தோவாளை வியாபாரிகளுக்கு பூ கொடுக்காமல் காவல்கிணறு மார்க்கெட்டிற்கு பூ கொண்டுவர முடியவில்லை. அதனால் விவசாயிகளால் காவல்கிணறு மலர் வணிக வளாகத்திற்கு வரமுடியவில்லை. தோவாளை வியாபாரிகள் பூக்கள் விலையை ஏற்றி, இறக்கி கொள்முதல் செய்ததால் என்னைப் போன்ற வியாபாரிகள் சில நாள்கள் காவல்கிணறு மலர் ஏலமையத்தில் கடைகளை நடத்தி பல லட்சங்கள் இழப்பை சந்தித்தோம். எனவே, மலர் வணிகத்தை தொடரமுடியாமல் விட்டுவிட்டோம் என்றார்.

"விவசாயப் பொருள்களை விற்பனை செய்யும் அங்காடியாக மாற்றத் திட்டம்'
இதுதொடர்பாக திருநெல்வேலி வேளாண் வணிக துறை செயலர் மல்லிகா கூறியதாவது: காவல்கிணறு மலர் ஏலமையம் குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். காவல்கிணறு பகுதியில் மலர் உற்பத்தி செய்யும் விவசாயிகள், வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தி மலர் ஏலமையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலர் விற்பனை மட்டுமல்லாது அனைத்து விவசாய உற்பத்தி பொருள்களையும் விற்பனை செய்யும் அங்காடியாக மாற்ற திட்டமிட்டு வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com