5 ஆவது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பு கிராமப்புறங்களில் அஞ்சல் சேவை அடியோடு முடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை 5 ஆவது நாளாக நீடித்த அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 200 க்கும் மேற்பட்ட கிளை அஞ்சலகங்கள் மூடப்பட்டன. இதனால், கிராமப்புறங்களில்

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை 5 ஆவது நாளாக நீடித்த அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 200 க்கும் மேற்பட்ட கிளை அஞ்சலகங்கள் மூடப்பட்டன. இதனால், கிராமப்புறங்களில் அஞ்சல் சேவைகள் அடியோடு பாதிக்கப்பட்டன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் கூட்டுப் போராட்டக்குழுவினர், இம்மாதம் 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் அஞ்சல் துறை தொடர்பான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. தபால்கள் பட்டுவாடா செய்யாமல் தேங்கி உள்ளன.
ஐந்தாவது நாளாக சனிக்கிழமை கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பி-3 அஞ்சல் எழுத்தர் சங்கம், பி-4 தபால்காரர் மற்றும் பன்முக திறன் பணியாளர்கள் சங்கத்தினர் சனிக்கிழமை பணிக்கு திரும்பியதால், நகரங்களில் அஞ்சலகம் தொடர்பான சேவைகள் மக்களுக்கு கிடைத்தன.
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் போராட்டத்தால் இம்மாவட்டத்திலுள்ள 222 கிளை அஞ்சலங்களில் 213 கிளைகள் மூடப்பட்டுள்ளன. 9 கிளை அஞ்சலகங்கள் மட்டும் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு இயங்கின. இதனால், சேமிப்பு கணக்கில் பணம் வரவு செலவு செய்தல், மணி ஆர்டர் பணப்பட்டுவாடா, பதிவு அஞ்சல், அஞ்சல் காப்பீடு பிரீமியம் செலுத்துதல், தபால் பட்டுவாடா போன்றவை இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்: கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் தலைமை அஞ்சலகம் முன்பு அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் கோட்டத் துணைத் தலைவர் இ. நடராஜன் தலைமை வகித்தார். பி-4 சங்கத்தின் கோட்டச் செயலர் எஸ்.கே.பாட்சா, கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்டச் செயலர் ஐ. ஞானபாலசிங், பி-3 சங்க கோட்டச் செயலர் எஸ்.கே. ஜேக்கப்ராஜ், கோட்டப் பொருளாளர் ஏ. நம்பி, நிர்வாகிகள் ஏ. பெரியதுரை, செல்வம், கற்பகராஜ், அப்துல் சமது, சாகுல் ஹமீது, லட்சுமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நாளை ரயில் மறியல்: திங்கள்கிழமை (மே 28) அனைத்து அஞ்சல் ஊழியர்கள் அமைப்பின் சார்பில் மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com