ஒருவர் கண்தானம் செய்தால் 4 பேர் பயனடையலாம்: ஆட்சியர்

ஒருவர் கண்தானம் செய்வதன் மூலம் நான்கு பேர் பயனடையலாம். எனவே, கண்தானம் செய்ய

ஒருவர் கண்தானம் செய்வதன் மூலம் நான்கு பேர் பயனடையலாம். எனவே, கண்தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ். 
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்தானம் செய்தவர்களுக்கான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து, கண்தானம் வழங்கியவர்களை கெளரவித்து நற்சான்றிதழ்களை வழங்கினார்.
பிறகு அவர் பேசியது: கருவிழியில் காயம் ஏற்படுதல், கிருமிகளால் தொற்றுநோய் ஏற்படுதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வைட்டமின் "ஏ' குறைபாடு ஆகியவற்றாலும் கருவிழி பாதிப்பு ஏற்படுகிறது. கருவிழியில் நோய் ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின்னரும் கருவிழி பாதிப்பு முழுமையாக குணமாகவில்லையெனில், கருவிழி மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாகும். 
நம்முடைய நாட்டில் ஓர் ஆண்டில் இறப்பவர்கள் அனைவரும் கண்தானம் செய்தால், கருவிழி பாதிப்பால் பார்வை குறைபாடு உள்ளவர்கள் அனைவருக்கும் பார்வை கிடைக்க வழிவகை செய்ய முடியும். கண் பார்வை குறைபாட்டிற்காக கண்ணாடி அணிந்துள்ளோர், கண் புரை நோய்க்கான அறுவை சிசிக்சை செய்தோர், நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள்கூட கண்தானம் அளிக்கலாம்.
எய்ட்ஸ்,  மஞ்சள்காமாலை, வெறிநாய்க்கடி, டெட்டனஸ் போன்ற சில காரணங்களுக்காக மட்டுமே கண்தானம் பெறுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. ஒருவர் இறந்தவுடன் அருகேயுள்ள கண் வங்கிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்தவுடன் கண் கருவிழிகளை, கண் இமைகளைக் கொண்டு மூடிவைக்க வேண்டும். அந்த அறையில் மின்விசிறியோ அல்லது குளிர்சாதன வசதியோ இருந்தால் அதை நிறுத்திவைக்க வேண்டும். 
ஒருவர் இறந்த 6 மணி நேரத்திற்குள் கண்கள் அகற்றப்பட வேண்டும். எனவே, ஒருவர் இறந்தவுடன் கண் வங்கிக்கு தகவல் தெரிவிப்பது மிகவும் அவசியம். கண்தானம் செய்வதால் முகம் விகாரம் அடைவதில்லை. ஒருவர் கண்தானம் செய்வதன் மூலம் 4 பேர் பார்வை பெறமுடியும். இத்தகைய அடிப்படைகளை பின்பற்றி கண்தானம் செய்வதால், கருவிழி பாதிப்பால் பார்வை குறைபாடு உள்ள அனைவருக்கும் கண்பார்வை அளிக்க இயலும் என்றார் ஆட்சியர். 
நிகழ்ச்சியில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எஸ்.எம். கண்ணன், பார்வையியல் துறைத் தலைவர்கள் ராஜலெட்சுமி,  ஆனந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com