புஷ்கர சிறப்பு ஆரத்தி: திரளான பக்தர்கள் வழிபாடு

தாமிரவருணி புஷ்கரம் நிகழ்ச்சியை முன்னிட்டு, பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் மற்றும் அகில பாரதிய துறவியர்

தாமிரவருணி புஷ்கரம் நிகழ்ச்சியை முன்னிட்டு, பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் மற்றும் அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பில் சிறப்பு ஆரத்தி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மேலும், காணியின மக்கள் பூங்குளத்திலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்.
தாமிரவருணி புஷ்கரம் விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதையொட்டி, பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பில் தாமிரவருணி புஷ்கரம் விழா கடந்த 4ஆம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருவாசகம் முற்றோதுதல், தேவாரம் முற்றோதுதல், ஆதிபராசக்தி மன்ற தீப வழிபாடு, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் வழிபாடு, அருட்பா பாராயாணம், தாமிரவருணி நதி பற்றிய கவியரங்கம், ஓவியப் போட்டி, கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடர்ந்து புஷ்கரம் நிகழ்ச்சியின் முதல் நாளான வியாழக்கிழமை காலை அகஸ்தியர் அருவியிலிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீர் கொண்டுவந்தனர். 
மேலும், காரையாறு வனப் பகுதியில் வசிக்கும் காணியின மக்கள் தாமிரவருணி தொடங்கும் பொதிகை மலையில் உள்ள பூங்குளத்திலிருந்து புனித நீர் கொண்டு வந்தனர். பின்னர், மாலை 6.15 மணிக்கு பஞ்ச பூத மேடையில் 16 வகை தீபங்கள், 5 வகை உபச்சாரங்களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அகில பாரத துறவியர் சங்கம் சார்பில் பாபநாசம் கோயில் படித்துறையில் நடைபெற்ற சிறப்பு புஷ்கரணி மஹா ஆரத்தியில் துறவிகள், ஜீயர்கள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com