நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்: விஎச்பி தலைவர் பேட்டி

நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் விஷ்ணு சதாசிவ கோக்ஜே.

நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் விஷ்ணு சதாசிவ கோக்ஜே.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது: 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தாமிரவருணி மஹா புஷ்கர விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களின் வழிபாடு, பாரம்பரியம், இயற்கை வளம் ஆகியவற்றை இவ் விழாவின் மூலம் இந்தியாவின் பிற பகுதி மக்கள் அறிந்து வியக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் பக்தியில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் கடந்த 1964 ஆம் ஆண்டு இந்து மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த தொடங்கப்பட்டது. ராமர் கோயில் கட்டுவதற்காக அனைத்துக் கட்சி மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்களிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற உள்ள மஹா கும்பமேளாவுக்குள் அரசு இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் விஸ்வ ஹிந்து பரிஷத் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கும்.
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, 800 ஆண்டு கால நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளது. இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும்.
ஓரினச் சேர்க்கை, முறைகேடான தொடர்பு குறித்து அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பால் திருமண ஒப்பந்தம் சீர்குலைவதோடு, கூட்டுக் குடும்ப முறை சிதைந்து, கலாசாரம், பண்பாடு பாதிக்கும் அபாயம் உள்ளது.
நீர், நிலம், காற்று உள்ளிட்ட பஞ்சபூதங்களால் மட்டுமே உலகின் அனைத்து ஜீவராசிகளும் உயிர்பெற்றுள்ளன. அவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். அரசு மட்டுமே நதிகளைப் பாதுகாக்க வேண்டுமென மக்கள் எண்ணக் கூடாது. நமது பங்களிப்பு மிகவும் அவசியம். நதியில் கழிவுகள் கலப்பதைத் தடுப்பதும், குப்பைகள், பாலித்தீன் கழிவுகள் சேர்வதைத் தடுப்பதும் மக்களின் பொறுப்பாகும். இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். நதிநீரை சேமிப்பது, அதனை முறையாக பங்கிடுவது, புதிய திட்டங்களை வகுக்கும் பணியில் அரசுகள் ஈடுபடுவது அவசியம் என்றார் அவர்.
பேட்டியின்போது அகில பாரத தலைவர் தினேஷ் சந்திரா, தென் பாரத மாநில அமைப்பாளர் நாகராஜன், தென் தமிழக  அமைப்பாளர் சேதுராமன், வடதமிழக அமைப்பாளர் ராமன், பஜ்ரங் தளம் அமைப்பாளர் சரவணன் கார்த்திக், மாநிலத் தலைவர் கோரக்ஸா, தென் தமிழக தலைவர் பெரி குழைக்காதர், செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com