பிசான பருவ நெற்பயிர் காப்பீடு: பிரீமியத் தொகை ஏக்கருக்கு ரூ.388: நவம்பர் 30 கடைசிநாள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கு ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ. 388 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கு ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ. 388 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால், பிசான பருவ நெல் சாகுபடியும் தொடங்கியுள்ளது. இப்பருவத்தில், 2018-19 ஆம் ஆண்டுக்கு சுமார் 58,500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை 12 சதவீதம் கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே, மாவட்டத்தில் பிசான நெல் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்வது மிகவும் அவசியம். பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் 2018-19 ஆண்டிற்கான பிசான பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம்.  மாவட்டத்தில் உள்ள 576 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் கடன் பெறும்போது கட்டாயமாக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்யப்படுவார்கள்.  கடன் பெறாத விவசாயிகள் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்துகொள்ளலாம். இதற்காக மாவட்டம் முழுவதும் 120 பொது சேவை மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து நாள்களிலும் செயல்படுகிறது. 
நிகழாண்டு இத்திட்டம் சோழ மண்டலம் பொது காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நெல் பயிருக்கு ஓர் ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ. 388 நிர்ணயிக்கப்பட்டது. பிசான பருவ நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, பிசான நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நெல் நாற்று விட்டவுடன், பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும். 
இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம்,  கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் பிரீமியம் தொகையை செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com