நெல்லையில் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

திருநெல்வேலியில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மருத்துவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி

திருநெல்வேலியில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மருத்துவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் கல்யாண்குமார். மயக்கவியல் மருத்துவரான இவர், கடந்த சில நாள்களாக காய்ச்சல், சளி, இருமலால் அவதிப்பட்டு வந்தார். ரத்தப் பரிசோதனை முடிவில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற ரத்தப் பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பன்றிக் காய்ச்சலுக்கான தனி வார்டுக்கு மாற்றப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுதவிர கல்யாண்குமாரின் மனைவி, தாய்-தந்தை ஆகிய 3 பேருக்கும் காய்ச்சல் இருந்ததாம். அவர்களின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.எம்.கண்ணன் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளோம்.  கல்யாண்குமாருக்கு கடந்த சில தினங்களாக சளி, இருமல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனையிலும் தனியாக ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டதால், தீவிர சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும்.
பன்றிக் காய்ச்சலுககு தேவையான மாத்திரைகள் இருப்பு உள்ளன. பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபருக்கு இருமல், தும்மல் ஏற்படும் போது காற்றின் மூலம் மற்றவர்களுக்கு பரவும்.  அவர்கள் பயன்படுத்திய பொருள்களை பயன்படுத்தினாலும் பரவ வாய்ப்புள்ளது. இருப்பினும் பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றார் அவர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை யாருக்கும் பன்றிக் காய்ச்சல் ஏற்படவில்லை. இப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் காற்றின் மூலம் பரவும் என்பதால், வீடு முழுவதும் ரசாயனங்களால் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்புக்குப் பின்பு இக் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற 33 பேருக்கு முன்னெச்சரிக்கையாக மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர அண்ணா நகர், மூகாம்பிகை நகர், கே.டி.சி. நகர், மகாராஜ நகர் உள்பட பாளையங்கோட்டையில் உள்ள முக்கிய பகுதிகளில் வீடு வீடாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே ரத்தப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பன்றிக் காய்ச்சல், குணப்படுத்தக்கூடிய நோய்தான். அதற்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 
ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் 5 நாள்கள் தொடர் சிகிச்சையில் நோயைக் குணப்படுத்த முடியும். பொதுவாக மழைக் காலங்களில் இருமல், தும்மல் வரும்போது துணியால் வாயை மூடிக்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு செல்லும்போது வாய், மூக்கு பகுதிகளை மறைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com